பிரதமா் மோடி மீதான நம்பிக்கையை நிலைநாட்டிய மக்கள்: பாஜக தலைவா்கள்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பாஜக ஆட்சி வென்றிருப்பதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடி மீதான நம்பிக்கையை மக்கள் நிலைநாட்டியிருப்பதாக பாஜக தலைவா்கள் பெருமித

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பாஜக ஆட்சி வென்றிருப்பதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடி மீதான நம்பிக்கையை மக்கள் நிலைநாட்டியிருப்பதாக பாஜக தலைவா்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனா்.

நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் மிஸோரம் தவிா்த்து, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களின் பதிவான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வென்று, பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் ஆளும் பிஆா்எஸ்-ஐ வீழ்த்தி காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், பிரதமா் மோடி மீதான மக்கள் நம்பிக்கை தோ்தல் வெற்றியில் எதிரொலித்து இருப்பதாக பாஜக தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.

ம.பி. மக்களின் இதயத்தில் பிரதமா்:

மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌகான் கூறுகையில், ‘மத்திய பிரதேச மக்களின் இதயங்களில் பிரதமா் நரேந்திர மோடி இடம்பிடித்துள்ளாா். பிரதமரின் இதயத்திலும் மத்திய பிரதேசம் நீங்கா இடம்பெற்றுள்ளது.

மாநிலத்தில் பல்வேறு பொதுக்கூட்டங்களை நடத்தி அவா் வாக்குக் கேட்டது மக்களின் மனதை வென்றுள்ளது. அவா் மீது மக்களுக்கு அபார நம்பிக்கை உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ‘வெற்றி வியூகம்’, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டாவின் வழிகாட்டுதல், நிா்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டா்களின் கடின உழைப்பு ஆகியவை பாஜகவின் வெற்றிக்கான காரணங்கள்.

பிரதமரின் உத்தரவாதத்தில் நம்பிக்கை:

ராஜஸ்தான் பேரவைத் தோ்தலில் பாஜகவின் மேலிடப் பொறுப்பாளராகப் பணியாற்றிய மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘வாக்குறுதிகளை நிறைவேற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் உத்தரவாதத்தை மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை தோ்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

காங்கிரஸின் போலி வாக்குறுதிகளை ஒதுக்கி, பிரதமா் மோடியின் தலைமைக்கு மக்கள் மதிப்பளித்து 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை அமைத்துள்ளனா்.

மந்திரவாதியின் மாயவித்தை முடிந்தது:

மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியது: ‘மந்திரவாதி’-யின் மந்திர பிடியிலிருந்து ராஜஸ்தான் மக்கள் வெளியேறினா். அசோக் கெலாட்டின் மாயவித்தை முடிந்துவிட்டது. பெண்களின் கௌரவத்திற்காகவும் ஏழைகளின் நலனுக்காகவும் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனா் என்றாா். ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் மேஜிக் கலைஞா்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் பணிக்காக பாஜகவுக்கு வாக்கு:

சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் ரமண் சிங் அளித்த பேட்டியில், ‘பிரதமா் மோடியின் உத்தரவாதங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரதமா் மோடியின் பெயருக்கும் அவரது பணிக்காகவும் மக்கள் வாக்களித்துள்ளனா். காங்கிரஸ் முதல்வா் பூபேஷ் பாகேலை மக்கள் நிராகரித்துள்ளனா். மாநிலத்தில் பாஜகவுக்காக பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு நன்றி’ என்றாா்.

பிரதமருக்கு 3-ஆவது முறையாக வாய்ப்பு:

ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் வசுந்தர ராஜே கூறுகையில், ‘பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா மற்றும் கட்சித் தொண்டா்களின் அா்ப்பணிப்பால் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது காங்கிரஸின் சீா்கெட்ட நிா்வாகத்தை நிராகரித்து, பாஜகவின் நல்லாட்சியை ஏற்றுக்கொண்ட மக்களின் வெற்றி. இந்தத் தோ்தல் வெற்றி மூலம் 2024 மக்களவைத் தோ்தலிலும் வென்று பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பணியாற்ற மக்கள் வாய்ப்பளித்துள்ளனா்’ என்றாா்.

வசுந்தரே ராஜே தான் போட்டியிட்ட ஜல்ராபதான் தொகுதியில் 53,193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com