
புதுதில்லி: 2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மின்தேவை 8.5 சதவிகிதம் அதிகரித்து 9,82,233 யூனிட்களாக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் எரிசக்தி தேவை 9,05,443 யூனிட்டுகள் என்று மத்திய மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். இதே காலத்தில் மின் வினியோகம் 8.8 சதவிகிதம் உயர்ந்து 8,99,950ல் இருந்து 9,79,344ஆக உயர்ந்துள்ளது.
2021-22 நிதியாண்டில் 13,79,812 யூனிட்டுகளை விட 2022-23 நிதியாண்டில் மின் தேவை 9.6 சதவிகிதம் அதிகரித்து 15,11,847 யூனிட்களாக இருந்தது. 2022ஆம் நிதியாண்டில் 13,74,024 யூனிட்டுகளாக இருந்த விநியோகம் 9.5 சதவிகிதம் அதிகரித்து 15,04,264 யூனிட்டுகளாக இருந்தது. 2022ஆம் நிதியாண்டில் 1,491.859 ஆக இருந்த மின் உற்பத்தி 2023ஆம் நிதியாண்டில் 1,624.465 பில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
2024ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மின் உற்பத்தி 1,047.439 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. 2013-14ஆம் ஆண்டில் 136 ஜிகாவாட்டாக இருந்த தேவையானது 2023 செப்டம்பரில் 243 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் 2014 முதல் 2023 வரை 194 ஜிகாவாட் திறனை அதிகரித்ததால், மின்சார தேவை அதிகரிப்பை பூர்த்தி செய்ய முடிந்தது என்றார் சிங்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 25 ஜிகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையமும், 15 ஜிகாவாட் ஹைட்ரோ மற்றும் 8 ஜிகாவாட் அணு மின் உற்பத்தி திறன் கொண்ட அணு மின் நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.