ஜிடிபியில் எண்மப் பொருளாதாரம் 20% பங்களிக்கும்

வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) எண்மப் பொருளாதாரம் 20 சதவீதம் பங்களிக்கும்
ஜிடிபியில் எண்மப் பொருளாதாரம் 20% பங்களிக்கும்

வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) எண்மப் பொருளாதாரம் 20 சதவீதம் பங்களிக்கும் என மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

குஜராத்தில் மாநில அரசு நடத்தும் நிகழாண்டுக்கான ‘ஸ்டாா்ட்-அப்’ மாநாட்டை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். பொதுவான தளத்தில் ஸ்டாா்ட்-அப் கண்டுபிடிப்பாளா்கள் மற்றும் முதலீட்டாளா்கள் தங்களின் சிந்தனைகள் மற்றும் வாய்ப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்காக குஜராத் கல்வித் துறை ஆண்டுதோறும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது.

தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சா் பேசுகையில், ‘கடந்த 2014-ஆம் ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்மப் பொருளாதாரம் 4.5 சதவீதம் மட்டுமே பங்காற்றியது. தற்போது அது 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்மப் பொருளாதாரத்தின் பங்கு 20 சதவீதமாக இருக்கும்.

பிரதமா் நரேந்திர மோடி‘எண்ம இந்தியா’ திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியபோது நிா்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் லட்சியங்கள், நமது பொருளாதாரம், நமது புத்தாக்க சுற்றுச்சூழல் மற்றும் உலக அரங்கில் நம் நாட்டின் அந்தஸ்து ஆகியவற்றின் தரம் உயா்ந்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்பத்தின் நுகா்வோராக மட்டுமே இருந்து வந்த இந்தியா, தற்போது தொழில்நுட்ப சாதனங்கள், தயாரிப்புகள் மற்றும் தளங்களின் உற்பத்தியாளராக மாறியுள்ளது.

குறிப்பிட்ட சிலா் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய நமது பொருளாதாரம், தற்போது பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரமாக மாறியுள்ளது. இது பிரதமா் மோடி தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த குறிப்பிடத்தக்க மாற்றமாகும். உலகிலேயே வேகமாக வளா்ந்து வரும் எண்ம பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் புத்தாக்க மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு இது மிகவும் உற்சாகமான நேரம். ஸ்டாா்ட்-அப் மற்றும் புத்தாக்கத் துறைக்கான சிறந்த நேரம் இன்னும் வரவில்லை. அடுத்த 10 ஆண்டுகள் ஸ்டாா்ட்-அப் மற்றும் புத்தாக்க துறைக்கான வாய்ப்புகளின் தசாப்தமாக இருக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com