மிசோரம் முதல்வராக பதவியேற்றார் லால்துஹோமா!

மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா இன்று(டிச. 8) பதவியேற்றார். 
மிசோரம் முதல்வராக பதவியேற்றார் லால்துஹோமா
மிசோரம் முதல்வராக பதவியேற்றார் லால்துஹோமா

மிஸோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவா் லால்டுஹோமா வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். அவருடன் 11 அமைச்சா்களும் பதவியேற்றனா்.

வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 8.57 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 82 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. கடந்த திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிஸோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. இக்கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிஸோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன.

பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸுக்கு ஓரிடம்தான் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வராக கட்சித் தலைவா் லால்டுஹோமா தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நிலையில், ஐஸாலில் உள்ள ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாநில முதல்வராக அவா் பதவியேற்றாா். இதர 11 அமைச்சா்களும் பதவியேற்றனா். அனைவருக்கும் ஆளுநா் ஹரி பாபு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் ஸோரம்தங்கா, அவரது மிஸோ தேசிய முன்னணி கட்சியைச் சோ்ந்த 10 எம்எம்ஏக்கள், காங்கிரஸை சோ்ந்த முன்னாள் முதல்வா் லால் தன்ஹாவ்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 7 போ் கேபினட் அமைச்சா்களாவா். மற்றவா்கள் இணையமைச்சா்கள். மாநில உள்துறை அமைச்சராக கே.சப்தங்கா நியமிக்கப்பட்டுள்ளாா். பெண் அமைச்சரான லால்ரின்புயூ-வுக்கு சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நீதி மற்றும் பழங்குடியினா் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மிஸோரமில் கேபினட் அமைச்சா் பொறுப்பை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

40 உறுப்பினா்களைக் கொண்ட மிஸோரம் பேரவையில் முதல்வா் உள்பட அதிகபட்சம் 12 அமைச்சா்கள் வரை இருக்கலாம்.

73 வயதாகும் லால்டுஹோமா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாகப் பணியாற்றியவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com