விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றச் சென்றபோது ஓட்டுநர் பலி -நிவாரணம் வழங்க உத்தரவு

சாலை விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றச் சென்றபோது, வாகனம் மோதியதில் உயிரிழந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றச் சென்றபோது ஓட்டுநர் பலி -நிவாரணம் வழங்க உத்தரவு

தில்லி : சாலை விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றச் சென்றபோது, எதிர்பாராத  விதமாக அவ்வழியே சென்ற வாகனம் ஒன்று மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஹரியாணாவின் கர்நால் மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடிய நபரை காப்பாற்றுவதற்காக, அவ்வழியே லாரியில் சென்ற ஒரு நபர் தன் வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அவருக்கு உதவச் சென்றதாக கூறப்படுகிறது.  அப்போது, எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற  வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில்,  இறந்த லாரி ஓட்டுநரின் மனைவி, கணவரை இழந்து பரிதவிக்கும் தன் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரியிருந்தார். ஆனால், அவருடைய கோரிக்கையை  நிராகரித்த  போக்குவரத்து ஆணையர், இறந்த லாரி ஓட்டுநர் தன் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றச் சென்றதாகவும், இதன் காரணமாக, அந்த  லாரி ஓட்டுநர் உயிரிழந்ததற்கு எவ்வித நிவாரணமும் வழங்க முடியாதென  கோரிக்கையை நிராகரித்துள்ளார்.  

இதைத் தொடர்ந்து,  கணவரை இழந்து பரிதவிக்கும் தன் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனக் கோரி, இறந்த லாரி ஓட்டுநரின் மனைவி, தில்லி  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் பணியாளர் இழப்பீடு சட்டத்தின் கீழ், நிவாரணம் வழங்க முடியாதென நிரகரி்க்க ஆணையரிடம் எவ்வித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும் என்கிற பரந்த கண்ணோட்டத்தில், ஆணையர் தனது உத்தரவை பிறப்பிக்கும் முன் இந்த வழக்கை பார்க்கவில்லை  என்றும் நீதிமன்றம்  குறிப்பிட்டுள்ளது.

’துன்பத்தில் அல்லல்படுவோருக்கு தாராள மனப்பான்மையுடன் உதவும் நல்லுள்ளம் கொண்ட  நபரே, ஒரு நல்ல சாமானியன்’ என்ற பைபிளின் வாசகத்தை மேற்கோள் காட்டிய நீதிமன்றம்,  இறந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு 2 மாதங்களுக்குள் உரிய நிவாரணம் வழங்க ஆவண செய்யுமாறு ஆணையருக்கு  அறிவுறுத்தியது.  மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக, ரூ.5 லட்சம் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்கவும் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com