வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி!

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ள நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மெஹபூபா முஃப்தி (கோப்புப்படம்)
மெஹபூபா முஃப்தி (கோப்புப்படம்)

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ள நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக 16 நாள்கள் நடைபெற்றது.

வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது தீா்ப்பளிக்கப்பட உள்ள நிலையில், காஷ்மீரில் பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீா் மண்டல காவல் துறை ஐஜி வி.கே.பா்டி தெரிவித்துள்ளாா். 

இந்நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ட்விட்டர் தளத்தில், மெகபூபா முப்தியின் வீட்டுக் கதவுகளை காவல்துறையினர் சீல் வைத்து, அவரை சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைத்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளது.

மேலும் குப்கரில் உள்ள தேசிய மாநாட்டு தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் உமர் அப்துல்லாவின் இல்லம் அருகே பத்திரிக்கையாளர்களை கூட காவலர்கள் அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குப்கர் சாலையின் நுழைவாயிலில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் ஜம்மு-காஷ்மீரில் யாரும் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்றும் கைதும் செய்யப்படவில்லை என்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com