
தில்லி : மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்காக, 200 மில்லியன்(20 கோடி) டாலர்கள் கடனுதவி வழங்க, ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், 2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து நகரங்களையும் குப்பையில்லா நகரமாக மாற்ற தூய்மை இந்தியா திட்டம் வழிவகுக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஆசிய வளர்ச்சி வங்கியின் நகர்ப்புற மேம்பாட்டுப் பிரிவுக்கான நிபுணர் அலெக்சாண்ட்ரா லான்ரோய் கூறியதாவது, “இந்தியாவின் வளர்ந்து வரும் நகரப்பகுதிகளில் நகர்ப்புற கழிவு மேலாண்மை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் இத்திட்டம், நகர்ப்புற திடக் கழிவு மேலாண்மை மேம்பாட்டிற்கு பேருதவியாக அமையும். மேலும், 8 மாநிலங்களை உள்ளடக்கிய 100 நகரங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்திடவும் உதவும்” என்று தெரிவித்தார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி, கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் ஆலைகள், கழிவுகளிலிருந்து பொருள்களை பிரித்தெடுக்கும் வசதிகள், பிளாஸ்டிக் கழிவுகளை பதப்படுத்தும் வசதிகள் உள்ளிட்ட கழிவு மேலாண்மை வசதிகளை மேம்படுத்திட ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மையில், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் வழிமுறைகள், புது தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல், பருவநிலை மற்றும் பேரிடர் எதிர்ப்பு முறைகளை கையாளுதல் ஆகியவற்றை அறிமுகப்படுத்த தூய்மை இந்தியா திட்டம் இலக்காக கொண்டுள்ளதாகவும், 8 மாநிலங்களை உள்ளடக்கிய 100 நகரங்களில், கழிவு மேலாண்மை வசதிகளை மேம்படுத்திடவும், தூய்மைப் பணிகளில், தனியார் துறை பங்களிப்பை ஈடுபடுத்திடவும், பெண்கள் பங்களிப்பை வலுப்படுத்திடவும் தூய்மை இந்தியா திட்டம் இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, சமூகp பயன்பாட்டுகான கழிவறைகள் கட்டுமானத்திற்கும், இந்த நிதியுதவி பயனளிக்கும் எனவும், கடனுதவியைத் தவிர்த்து, ஆசிய வளர்ச்சி வங்கி கூடுதல் தொகையாக, 3.15 மில்லியன்(31.50 லட்சம்) டாலர்கள் அளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.