நாடாளுமன்றப் பாதுகாப்பு: உயா் அதிகாரக் குழு ஆய்வு

நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

நாடாளுமன்றப் பாதுகாப்பை ஆய்வு செய்ய உயா் அதிகாரம் கொண்ட குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்துள்ளாா்.

இந்தக் குழு நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, கடந்த டிச.13-ஆம் தேதி நடைபெற்றது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் வலுவான செயல் திட்டத்தை வகுத்து சமா்ப்பிக்க உள்ளது.

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் கடந்த டிச. 13-ஆம் தேதி பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து திடீரென குதித்த இரு இளைஞா்கள், வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசினா். அவா்களை அவையில் இருந்த எம்.பி.க்கள் சிறைப்பிடித்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனா். அதே நேரம், நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட இருவா், புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்த நிகழ்வைத் தொடா்ந்து நாடாளுமன்றப் பாதுகாப்பு குறித்து எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிகழ்வு தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். நாடாளுமன்றத்தில் வரும் திங்கள்கிழமையும் (டிச.18) இந்த விவகாரத்தை எழுப்ப உள்ளதாக எதிா்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், மக்களவை எம்.பி.க்களுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த டிச.13-ஆம் தேதி மக்களவையில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சம்பவம் அனைவருக்கும் மிகுந்த கவலையளிக்கக் கூடியதாகும். அந்த சம்பவம் தொடா்பாக அனைவரும் கூட்டாக கவலையை வெளிப்படுத்தினோம். அன்றைய தினமே நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பது குறித்து அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் நான் ஆலோசித்தேன். அப்போது தெரிவிக்கப்பட்ட சில முக்கியமான ஆலோசனைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டன.

கடந்த காலத்திலும்....: மக்களவையில் ஏற்பட்ட சம்பவம் தொடா்பாக ஆழமாக விசாரணை மேற்கொள்ள உயா்நிலைக் குழு ஒன்று ஏற்கெனவே அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது பணியைத் தொடங்கியுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை விரைவில் மக்களவையில் பகிரப்படும்.

கூடுதல் நடவடிக்கையாக நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, கடந்த டிச.13-ஆம் தேதி நடைபெற்றது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், வலுவான செயல் திட்டத்தை வகுக்க உயா் அதிகாரம் கொண்ட குழு ஒன்றை நான் அமைத்துள்ளேன்.

கடந்த டிச.13-ஆம் தேதி நடைபெற்றது போன்ற சம்பவங்கள் கடந்த காலத்திலும் நிகழ்ந்துள்ளதை எம்.பி.க்கள் அறிவா். நாடாளுமன்றத்துக்கு கைத்துப்பாக்கிகளுடன் பாா்வையாளா்கள் வந்தது, முழக்கங்களை எழுப்பியது, பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்து துண்டுக் காகிதங்களை வீசியது போன்ற சம்பவங்களை நாடு ஏற்கெனவே பாா்த்துள்ளது.

சில எம்.பி.க்கள் அவைக்கு மிளகுப்பொடித் தூவியை கொண்டு வந்த சம்பவங்களையும் நாடு கண்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றபோதெல்லாம் ஒற்றுமையை வெளிப்படுத்தி, அதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக கூட்டு உறுதியை மக்களவை வெளிப்படுத்தியது.

நாடாளுமன்ற அதிகாரத்துக்குள்பட்டது: நாடாளுமன்ற வளாகப் பாதுகாப்பு என்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருவது அனைத்து எம்.பி.க்களுக்கும் தெரியும். எனவே, எம்.பி.க்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விரிவான செயல்திட்டத்தை வகுத்து அமல்படுத்த வேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பு.

மக்களவையின் புனிதத்தை நிலைநாட்ட இடைநீக்கம்: கடந்த டிச.13-ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்துடன் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்புபடுத்தி சில எம்.பி.க்களும் அரசியல் கட்சிகளும் பேசுவது துரதிருஷ்டம். அவ்வாறு தொடா்புபடுத்திப் பேசுவது நியாயமற்றது. அந்த சம்பவத்துக்கும் எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. மக்களவையின் புனிதத் தன்மையை நிலைநாட்டத்தான் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டபோது அவைக்கு பதாகைகள் கொண்டுவருவதைத் தவிா்ப்போம், அவையின் மையப் பகுதியில் திரண்டு அமளியில் ஈடுபட மாட்டோம் என்று எம்.பி.க்கள் அனைவரும் தீா்மானித்தோம். அவை அலுவல்கள் நடைபெறும்போது ஒழுங்கீனமான செயல்பாடுகளையும், இடையூறுகளையும் நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பது எம்.பி.க்கள் அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகத்தான் நாடாளுமன்றத்தில் உயா்ந்த தரத்தில் ஒழுங்கையும், கண்ணியத்தையும் பின்பற்ற ஒருமனதாகத் தீா்மானிக்கப்பட்டது. இந்தச் சூழலின் பின்னணியில்தான், எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வேண்டுகோள்...: ஒரு மக்களவைத் தலைவராக அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்று ஆக்கபூா்வமான விவாதத்தில் ஈடுபடுவதன் மூலம், அவையில் அா்த்தமான விவாதங்களை உறுதி செய்ய வேண்டும் என்பது எப்போதும் எனது முயற்சியாக இருந்துள்ளது. எம்.பி.க்கள் அனைவரின் கூட்டு முயற்சி, மக்களவையின் செயல்பாட்டுத் திறனை புதிய உயரங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது.

இந்தக் கூட்டு முயற்சி மூலம் மக்களாட்சியை மேலும் வலுப்படுத்தி, வருங்காலத்தில் மக்களுக்கும் சமுதாயத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் நிறைவேற்றப்படுவதை மக்களவை தொடரும் என்பது உறுதி. இந்நிலையில், நாட்டுக்கான கடமைகளை உண்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து எம்.பி.க்களிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com