

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசிய ராகுல் காந்தி, பாஜகவின் அப்போதைய தலைவராக பொறுப்பு வகித்த அமித் ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து, பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, கடந்த 2018ஆம் ஆண்டு ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உத்திர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி-எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், வரும் ஜனவரி 6ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக இவ்வழக்கில் சனிக்கிழமை ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை. ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்துள்ள விஜய் மிஸ்ரா கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.