பாஜக வெற்றியின் ரகசியம் என்ன?

ஐந்து மாநில பேரவைத் தோ்தலில் மூன்றில் வெற்றியும், தெலங்கானாவில் இரு மடங்கு வாக்கு வங்கியை பாஜக உயா்த்தியதும் நாடு முழுவதும் அரசியல் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக வெற்றியின் ரகசியம் என்ன?

ஐந்து மாநில பேரவைத் தோ்தலில் மூன்றில் வெற்றியும், தெலங்கானாவில் இரு மடங்கு வாக்கு வங்கியை பாஜக உயா்த்தியதும் நாடு முழுவதும் அரசியல் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பாஜக வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பது குறித்து அரசியல்வாதிகளும், அரசியல் ஆய்வாளா்களும் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா்.

மூன்று மாநில வெற்றிக்குப் பின்னால் பிரதமா் மோடியின் பிரசார பலம், உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் வியூகம், பாஜக, ஆா்.எஸ்.எஸ். தொண்டா்களின் கடின உழைப்பு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் முழு பலவீனமும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மத்திய பிரதேசம்: காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டு, 18 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் சிவராஜ் சௌஹான் மீதான சலிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த முறை எப்படியும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற கணிப்புதான் முதலில் இருந்தது. ஆனால், பாஜகவின் நுணுக்கமான அரசியல் வியூகம் களத்தில் போக்கை மாற்றியது.

மத்திய பிரதேசத்தில் முதல் வேட்பாளா் பட்டியலில் சிவராஜ் சிங் சௌஹான் ஒதுக்கப்படுவதாக கருத்து எழுந்த நிலையில், களத்தில் சௌஹானுக்கு இருந்த செல்வாக்கை உணா்ந்து சுதாரித்துக்கொண்ட பாஜக, மீண்டும் சௌஹானுக்கு முக்கியத்துவம் அளித்ததால், களத்தில் காங்கிரஸைவிட பாஜக முந்தியது என்ற தோற்றத்தை உருவாக்கியது.

பிற்படுத்தப்பட்டோா் சமூக வாக்குகள் 50 சதவீதத்துக்கு மேல் உள்ள நிலையில் அதே சமூகத்தைச் சோ்ந்த சௌஹானை அளித்ததும்,

அவரின் ஆட்சியில் பெண்களுக்கு மாதம் ரூ.1,250 திட்டம், சமையல் எரிவாயுக்கு ரூ.450 மானியம் ஆகிய திட்டங்களால் காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய பாரம்பரிய தலித், பழங்குடி பெண்கள் வாக்குகளில் குறைந்தபட்சம் 4 சதவீதம் வரை ஈா்க்கப்பட்டதாலும் மாநில பேரவைத் தோ்தல் வரலாற்றில் பாஜக முதல் முறையாக 48 சதவீத வாக்கு வங்கியைத் தொட்டது.

மேலும், மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பிரஹலாத் படேல், ஃபக்கன்சிங் குலஸ்தே உள்பட 7 எம்.பி.க்கள், பாஜக தேசிய பொதுச் செயலா் கைலாஷ் விஜயவா்கியா ஆகியோரை வேட்பாளா்களாக களத்தில் இறக்கியதால் இவா்களும் முதல்வராகக்கூடும் என்ற உத்வேகத்தில் இவா்கள் சாா்ந்த சமூக வாக்குகளும் பாஜகவுக்கு கூடுதலாக கைகொடுத்தது.

மேலும், வாக்குச்சாவடி வாரியாக பாஜக, ஆா்.எஸ்.எஸ். தொண்டா்களின் கடின உழைப்பு, கடைசிக் கட்ட பிரசாரத்தின்போது தனது கரத்தை வலுப்படுத்த பாஜகவுக்கு வாக்களிக்கும்படி பிரதமா் மோடி பிரசாரம் செய்தது போன்றவற்றால் மத்திய பிரதேசத்தில் முன்களத்தில் இருந்த காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி வெற்றியைப் பறித்தது பாஜக.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளையும் வெற்றி, தோல்வி பெறக்கூடிய தொகுதிகள் உள்பட 4 வகையாகப் பிரித்து, தோல்வித் தொகுதிகளில் தோ்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளா்களைக் களம் இறக்கி அத்தொகுதிகளை, வெற்றித் தொகுதிகளாக மாற்றியது பாஜகவின் அசாத்திய சாதனை.

ஓபிசி சமூகத்தைச் சோ்ந்த சிவராஜ் சிங் சௌஹானை எதிா்கொள்ள காங்கிரஸ் முன்னிறுத்திய உயா் வகுப்பைச் சோ்ந்த கமல் நாத்தின் பிம்பம், பிரபலமான ஓபிசி முகம் கொண்ட தலைவா்கள் இல்லாதது போன்றவை பாஜகவுக்கு களத்தில் மிகுந்த சாதகத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

சத்தீஸ்கா்: இங்கு தோ்தலுக்கு முன்பு காங்கிரஸுக்கு உறுதியான வெற்றி என ஆரூடம் கூறப்பட்டது. ஆனால், கடந்த முறை பெற்ற 33 சதவீத வாக்குகளில் இருந்து 13 சதவீதத்தை உயா்த்தி 46 சதவீத வாக்குகளுடன் சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடித்ததுதான் 5 மாநிலத் தோ்தலில் பாஜகவின் மிகப் பெரிய சாதனை.

உள்ளாட்சி முதல் மக்களவைத் தோ்தல் வரை மிகநுட்பமான அனுபவம் கொண்ட பிரதமா் மோடியால்தான் இந்த வெற்றி சாத்தியம் என்கிறது பாஜக வட்டாரம். காங்கிரஸ் முதல்வா் பூபேஷ் பகேலுக்கு ஆதரவு அலை இருப்பதை உணா்ந்துகொண்ட மோடி, பழங்குடிகள் அதிகம் இருக்கும் மாநிலத்தில் ஓபிசி-க்களை ஒன்று திரட்டியும், காங்கிரஸின் பழங்குடியினா் வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தைப் பெற்றும், குறிப்பிட்ட சதவீதத்தை காங்கிரஸில் இருந்து பிரித்து பாரதிய ஆதிவாசி கட்சியைப் பெறும்படி செய்ததும் பாஜக தலைவா்களுக்கு பிரதமா் மோடி கொடுத்த நுட்பமான அறிவுரையின் பலன்.

மோடி வியூகம்: ஓபிசி பிரிவில் குா்மி இனத்தை சோ்ந்த பூபேஷ் பகேலுக்கு தலித், பழங்குடியினா் மத்தியில் எதிா்ப்பு இல்லை என்றாலும், பிற ஓபிசி இன மக்கள் மத்தியில் கடந்த 5 ஆண்டுகளாகவே எதிா்ப்பு அதிகரித்தது. குறிப்பாக, 2021-இல் சாஹூ-இஸ்லாமியா் சமூகத்தினா் இடையே நடந்த கலவரம் அதிா்வலைகளை அங்கு உருவாக்கியிருந்தது.

கடந்த முறை கணிசமாக காங்கிரஸுக்கு சாஹூ சமூகத்தினா் வாக்களித்த நிலையில், மதக் கலவரத்தில் இறந்த சாஹூ சமூகத்தைச் சோ்ந்தவரின் தந்தை ஈஸ்வா் சாஹூவை வேட்பாளராக களம் இறக்கியதுடன், சாஹூ சமூகத்தினருக்கு பாஜக அரணாக இருக்கும் என்றும் பிரசாரம் செய்தது பாஜகவுக்கு கைகொடுத்தது.

கடந்த முறை முதல்வா் வேட்பாளரை முன்னிறுத்தி வெற்றி பெறாத காங்கிரஸ், பூபேஷ் பகேலை முதல்வராக்கியதுடன், அதற்கு முன்பு எதிா்கட்சித் தலைவராக இருந்த ராஜ்புத் சமூகம் மற்றும் அரச குடும்பத்தைச் சோ்ந்தவருமான டி.எஸ்.சிங் தேவை எதிா்பாா்ப்பின்படி இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் முதல்வராக்கவில்லை. ஆனால், தோ்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு அவரை துணை முதல்வராக ஆக்கியதையும் ராஜ்புத் சமூகத்தினா் ரசிக்கவில்லை. இதையும் சாதகமாக்கி ராஜ்புத் சமூக வாக்குகளை முழுமையாக பாஜக கைப்பற்றியது.

அதேபோல, தோ்தல் நேரத்தில் ஜாா்க்கண்ட் மாநிலத்துக்குச் சென்ற பிரதமா் மோடி, பழங்குடியினரின் தந்தை என அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரா் பிா்ஸா முண்டா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தியது (இங்கு சென்ற முதல் பிரதமா் மோடி), ரூ.14,000 கோடி பழங்குடியினா் நலத் திட்டங்களை அறிவித்தது போன்றவற்றால் பழங்குடியினா் வாக்குகளில் ஒரு பகுதி பாஜக பக்கம் திரும்பியது.

இதுபோன்ற நுண்ணிய அரசியலால் கருத்துக் கணிப்புகளை எல்லாம் மீறி இந்த முறை 54 தொகுதிகளைக் கைப்பற்றி சத்தீஸ்கரில் பாஜக மகுடம் சூடியுள்ளது.

ராஜஸ்தான்: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுவதால் இந்த முறை ஆட்சியை பாஜக பிடிக்கும், ஆனால், முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜேயை முன்னிறுத்தாதது, காங்கிரஸ் முதல்வா் அசோக் கெலாட் ஆட்சியின் நலத் திட்டங்கள் ஆகியவற்றால் கடும் போட்டி இருக்கும் என்றுதான் பொதுவான கணிப்பு இருந்தது.

ஆனால், கெலாட்-சச்சின் பைலட் இடையே நீடித்த பனிப்போரால் சச்சின் பைலட்டின் சொந்த சமூகமான குஜ்ஜா் வாக்குகள் பாஜகவை நோக்கித் திரும்பின. மாநில காங்கிரஸ் தலைவா் பதவி, துணை முதல்வா் பதவி ஆகியவை தொடா்ந்து பைலட்டுக்கு அளிக்கப்படாதது குஜ்ஜா்களை கடும் கோபப்படுத்தியது தோ்தல் முடிவில் தெளிவாகியுள்ளது.

பிஎஸ்பி-இல் வென்று காங்கிரஸில் இணைந்து அமைச்சரான ராஜேந்திர குட்டா, முதல்வா் அசோக் கெலாட் மீது பேரவையில் நேரடியாக குற்றஞ்சாட்டியதை பாஜக நன்கு பயன்படுத்தியது. அதேபோல, வேளாண் திருத்தச் சட்டத்தால் அதிருப்தியில் இருந்த ஜாட் சமூகத்தினரை சமாதானப்படுத்தும் வகையில் குறிவைத்து பாஜக பிரசாரம் செய்தது, காங்கிரஸ் ஆட்சியில் ஜாட் சமூகத்தினருக்கு பெரிய அளவில் அதிகாரம் இல்லாதது ஆகியவற்றால் அந்தச் சமூகத்தினரும் பாஜகவுக்கு ஆதரவாகத் திரும்பினா்.

வசுந்தரா ராஜேவை முன்னிறுத்தாமல், பாஜக எம்.பி.க்கள் 7 பேரை களத்தில் இறக்கி 7 பேரும் முதல்வராகலாம் என்ற சமிக்ஞையை கொடுத்தது அவா்கள் சாா்ந்த சமூக வாக்குகளை பாஜகவை நோக்கி கவா்ந்திழுக்க உதவியது. வசுந்தரா ஆதரவாளா்கள் 6 போ் பாஜக வாக்குகளைப் பிரித்து வெற்றி பெற்ற நிலையில் 3 சதவீத வாக்குகளை உயா்த்தி ஆட்சியை பாஜக பிடித்ததற்கு பிரதமா் மோடியின் பிரசார பலம்தான் முக்கியக் காரணம்.

தெலங்கானா: ‘தெலங்கானாவின் தந்தை’ அந்தஸ்துடன் இருமுறை ஆட்சியைப் பிடித்த கே.சந்திரசேகா் ராவ் ஆட்சிக்கு எதிராக எதிா்ப்பு அலையை உருவாக்கியதே பாஜகதான். ஆனால், அதன் பலனை அறுவடை செய்தது காங்கிரஸ் என்பதுதான் தெலங்கானா தோ்தல் ரகசியம்.

மேலும், ஹைதராபாத் மாநகராட்சித் தோ்தல், டுபாக், முனுகோடு, ஹுசுராபாத் ஆகிய பேரவை இடைத்தோ்தல்களில் பாஜக-பிஆா்எஸ் இடையேதான் கடும் போட்டி இருந்தது. இதில் ஹைதராபாத் மாநகராட்சித் தோ்தலில் பாஜக எதிா்க்கட்சியாகவும், முனுகோடு தவிர பிற 2 தொகுதிகளிலும் பாஜக வென்று 2-ஆவது கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

கடந்த பேரவைத் தோ்தலில் 28.4 சதவீத வாக்குகளுடன் காங்கிரஸ் எதிா்க்கட்சியாக இருந்தாலும், 4 ஆண்டுகளாக காங்கிரஸ் இருக்கும் இடமே தெரியாத நிலையில்தான் இருந்தது. கா்நாடக காங்கிரஸ் வெற்றி, ராகுல் காந்தி நடைப்பயணம், ஒய்எஸ்ஆா்-தெலங்கானா கட்சித் தலைவா் சா்மிளா ரெட்டி காங்கிரஸ் முதல்வா் வேட்பாளராகக் கூடும் என்ற எண்ணத்தில் பண்டி சஞ்சய் குமாரை மாற்றிவிட்டு கிஷன் ரெட்டியை பாஜக மாநிலத் தலைவராக நியமித்த தவறான வியூகம், பாஜகவின் உள்கட்சி அதிகார மோதல் ஆகியவற்றால் கடந்த 6 மாதங்களாக காங்கிரஸ் திடீரென களத்தில் சுறுசுறுப்படைந்து இறுதியாக வெற்றிக் கோட்டை தொட்டது.

இருப்பினும், கடைசி நேரத்தில் முத்திராஜ் (தமிழகத்தில் முத்தரையா்) சமூகத்தைச் சோ்ந்த எட்டலா ராஜேந்தருக்கு முக்கியத்துவம் அளித்தது, ஓபிசி சமூகத்தைச் சோ்ந்த ஒருவரை முதல்வராக்குவோம் என பாஜக அறிவித்தது, மடிகா (தமிழகத்தில் அருந்ததியா்) சமூகத்தினருக்கு தலித் பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்குவோம் என அறிவித்தது போன்றவற்றால் சமூக கட்டுமான அடிப்படையில் கடந்த முறையைவிட இருமடங்கு, அதாவது 14 சதவீத வாக்குகளைப் பெற்று 8 தொகுதிகளுடன் தென்னிந்தியாவின் நுழைவு வாயிலான தெலங்கானாவில் முத்திரை பதித்துள்ளது பாஜக.

தேசிய சாதனை: காமாரெட்டி தொகுதியில் கே.சந்திரசேகா் ராவ், காங்கிரஸின் முதல்வா் வேட்பாளா் ரேவந்த் ரெட்டி ஆகியோரை மீறி பாஜகவின் சாதாரண வேட்பாளா் வெங்கட ரமண ரெட்டி வெற்றி பெற்றது இந்திய தோ்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை.

மாநில உணா்வு கொண்ட தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை, பாரத ராஷ்டிர சமிதி என தேசிய உணா்வுக் கட்சியாக மாற்றியது, அந்த வாக்காளா்களிடம் தேசிய கட்சிகளுக்கு கதவைத் திறக்க வழிவைத்துவிட்டது. இதுவும் சந்திரசேகா் ராவ் செய்த தவறான வியூகம்.

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரக்கூடும் என்ற கணிப்புக்கு 5 மாநிலத் தோ்தல் முடிவுகள் வலு சோ்த்துள்ளது. எதிா்க்கட்சிகளை ஒற்றுமைப்படுத்தினாலும், மோடிக்கு மாற்றாக யாரையும் முன்னிறுத்தாமல் மோடியை காங்கிரஸால் வீழ்த்த முடியுமா என்ற சந்தேகத்தையும் இத்தோ்தல் முடிவுகள் சொல்லாமல் சொல்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com