'அத்வானி, முரளி மனோகர் ஜோஷி வர வேண்டாம்' - ராமர் கோயில் அறக்கட்டளை

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் வர வேண்டாம் என்று கோயில் அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. 
முரளி மனோகர் ஜோஷி, எல்.கே. அத்வானி
முரளி மனோகர் ஜோஷி, எல்.கே. அத்வானி

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் வர வேண்டாம் என்று கோயில் அறக்கட்டளை கேட்டுக்கொண்டுள்ளது. 

ராம ஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து கடந்த 2020 ஆகஸ்டில் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவா் குழந்தை ராமா் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குறிப்பாக பாஜக தலைவர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. 

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரின் வயதை கருத்தில்கொண்டு விழாவுக்கு வர வேண்டாம் என்று கோயில் அறக்கட்டளை கேட்டுக்கொண்டதாகவும் இதனை அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இருவரும் ஏற்றுக்கொண்டதாகவும் ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். 

அத்வானிக்கு இப்போது 96 வயது, ஜோஷிக்கு அடுத்த மாதம் 90 வயதாகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கோரி போராட்டம் நடத்தியவர்களில் இருவரும் முக்கியமானவர்கள்.இந்நிலையில் இவர்கள் இருவரையும் கோயில் அறக்கட்டளையே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மேலும் கூறுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 15 ஆம் தேதிக்குள் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும். மூலவர் ராமர் பிரதிஷ்டைக்கான பூஜை ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும்.

முன்னாள் பிரதமர் தேவகௌடாவை நேரில்ச சந்தித்து விழாவிற்கு அழைப்பு விடுக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

விழாவிற்கு சுமார் 4,000 துறவிகள் 2,200 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சங்கராச்சாரியார்கள், சுமார் 150 துறவிகள், முனிவர்கள் விழாவில் பங்கேற்பார்கள்.

ஜனவரி 23 ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com