மக்களவையிலேயே கேலி செய்தது யார்?: மோடியின் விடியோவைப் பகிர்ந்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

மாநிலங்களவைத் தலைவரை கேலி செய்ததை பாஜகவினர் விமர்சித்து வரும் சூழலில், காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடி பேசும் விடியோவை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவையிலேயே கேலி செய்தது யார்?: மோடியின் விடியோவைப் பகிர்ந்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
Published on
Updated on
1 min read

மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கரை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கேலி செய்ததை பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மக்களவையில் கேலியாகப் பேசும் விடியோ ஒன்றினை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினா்கள் 142 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது, திரிணமூல் காங்கிரஸின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதை போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையில் செய்து காட்டினார். அங்கிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இதனை தனது செல்போனில் விடியோ எடுத்தார்.

கல்யாண் பானர்ஜியின் இந்தச் செயலையும், இதை தடுக்காத ராகுல் காந்தியையும் பாரதிய ஜனதா கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்ற மக்களவையில் கேலி செய்யும் விதமாகப் பேசும் விடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “மாநிலங்களவைத் தலைவரை கேலி செய்ததாக பிரச்னை எழுப்பி 142 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்ப பெரிய அளவிலான முயற்சிகள் நடக்கின்றன.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதில்லை. ஆனால் தற்போது கேலி செய்ததைப் பற்றி பேசுபவர்கள், இதற்கு முன்பு யாரையெல்லாம் கேலி செய்தார்கள், அதுவும் மக்களவையில் அத்தகைய செயலில் ஈடுபட்டார்கள் என்பது நினைவிற்கு வருமா?” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com