ஒரே கட்சி உறுப்பினர்களை கொண்டு நாடாளுமன்றத்தை நடத்த பார்க்கிறார்கள்: திருச்சி சிவா பேட்டி

ஒரே நாடு-ஒரே தேர்தல் என்ற பாஜகவின் சர்வாதிகார சிந்தனையை போன்றே ஒரே கட்சி உறுப்பினர்களை கொண்டு நாடாளுமன்றத்தை நடத்த பார்க்கிறார்கள்
ஒரே கட்சி உறுப்பினர்களை கொண்டு நாடாளுமன்றத்தை நடத்த பார்க்கிறார்கள்: திருச்சி சிவா பேட்டி
Published on
Updated on
1 min read

புதுதில்லி: ஒரே நாடு-ஒரே தேர்தல் என்ற பாஜகவின் சர்வாதிகார சிந்தனையை போன்றே 'ஒரே கட்சி' உறுப்பினர்களை கொண்டு நாடாளுமன்றத்தை நடத்த பார்க்கிறார்கள் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார். 

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 13-ஆம் தேதி மக்களவையின் பாா்வையாளா் மாடத்தில் இருந்து திடீரென உள்ளே குதித்த இரு இளைஞா்கள், வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட இருவா் வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனா். இவ்விரு சம்பவங்களும் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின.

நாடாளுமன்றப் பாதுகாப்பில் மிகப் பெரிய குறைபாடாகக் கருதப்படும் இந்த விவகாரத்தை கையிலெடுத்த எதிா்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதையடுத்து, மக்களவை, மாநிலங்களவையில்  அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த மேலும் 141 உறுப்பினா்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதமுள்ள நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையிவ் திருச்சி சிவா நோட்டீஸ் அளித்தார். 

தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ஒரே நாடு-ஒரே தேர்தல் என்ற பாஜகவின் சர்வாதிகார சிந்தனையை போன்றே ஒரே கட்சி உறுப்பினர்களை கொண்டு நாடாளுமன்றத்தை நடத்த பார்க்கிறார்கள் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற வரலாற்றில் இவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 141 உறுப்பினர்களை பாஜக அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

மேலும் தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் செய்திக்கு கேள்விக்கு பதிலளிக்கையில், குஜராத்துக்கு ஏதாவதொன்றால் அள்ளிக்கொடுக்கும் மோடி அரசு தமிழகத்தை வஞ்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கடசிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் இப்படி வஞ்சிப்பது மற்ற நேரங்களில் இருந்தாலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த வரலாறு காணாத வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு மக்கள் வாடி நிற்கின்ற போது, தேவைகளால் தடுமாறுகிற போது மாநில அரசு முனைப்போடு செயல்படும் போது மத்திய அரசு உதவி செய்யவோ, உறுதுணையாகவோ இருக்க முயலவில்லை என்றால் அங்கேயும் அவர்கள் அரசியல் செய்கிறார்கள், பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.