மத்திய அரசின் வரிப்பகிர்வு: தமிழகத்துக்கு ரூ.2,967 கோடி; உ.பி.க்கு ரூ.13,088 கோடி

மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வில் கூடுதல் தவணையாக ரூ.72,961 கோடியை மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது.
மத்திய அரசின் வரிப்பகிர்வு: தமிழகத்துக்கு ரூ.2,967 கோடி; உ.பி.க்கு ரூ.13,088 கோடி

புது தில்லி: மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வில் கூடுதல் தவணையாக ரூ.72,961 கோடியை மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது. அதில் தமிழகத்துக்கு ரூ.2,967 கோடியும், உ.பி.க்கு 13,088 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வில், நிகழ் டிசம்பர் மாதத்தில் இரண்டாம் தவணை நிதியாக ரூ.72,961 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் இன்று விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.2,967 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.13,088.51 கோடியும் அடுத்ததாக பிகாருக்கு ரூ.7338.44 கோடியும் மத்திய பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.5488.88 கோடியும்  ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிசம்பர் 11ஆம் தேதி நிகழ் மாதத்துக்கான முதல் வரிப் பகிர்வு தவணை அளிக்கப்பட்டிருந்தது. இவ்விரண்டு தவணைகளையும் சேர்த்தால், மத்திய அரசு இந்த மாதத்தில் அளித்திருக்கும் வரிப் பகிர்வு ரூ.1.46 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்கள் மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மத்திய அரசு, மாநிலங்களுக்கு இந்த வரிப் பகிர்வை மேற்கொண்டுள்ளது.  இதன் மூலம், மாநில அரசுகள் தங்களின் மூலதனம், மேம்பாட்டுச் செலவினங்களை விரைவுப்படுத்தவும், அவர்களது கரங்களை வலுப்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டின்படி, இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம், ஒரு நிதியாண்டில் 14 தவணைகள் மூலம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2023 - 24ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையின்படி, மத்திய அரசு, மாநிலங்களுக்கு வரிப் பகிர்வாக இந்த நிதியாண்டில் ரூ.10.21 லட்சம் கோடியை பகிர்ந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருநிறுவன வரி, வருமான வரி, சொத்து வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி, சேவை வரி போன்றவற்றில் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதில் பிகார், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் கார்ப்பரேட் வரி எனப்படும் பெருநிறுவனம், வருமான வரி, ஜிஎஸ்டி ஆகிய வரிகள்  அதிகளவில் வசூலாகி வருகிறது. இதன் அடிப்படையில், இந்த மாநிலங்களக்கு ஆண்டுக்கு தலா ரு.50 ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு வரிப் பகிர்வில் நிதி கிடைக்கிறது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசமும், பிகாரும் பெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com