ராகுல் முதல் பொன்முடி வரை.. 2023-ல் நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்புகள்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் முதல் பொன்முடி சிறைத் தண்டனை வரை நீதிமன்றங்கள் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
2023 - நீதிமன்ற தீர்ப்புகள்
2023 - நீதிமன்ற தீர்ப்புகள்

2023ஆம் ஆண்டில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் முதல் பொன்முடி சிறைத் தண்டனை வரை நீதிமன்றங்கள் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதிமன்றங்கள் வழங்கும் பல்வேறு தீர்ப்புகள் இந்திய அரசியலிலும், மக்கள் மத்தியிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 2023-ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வரலாற்று தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

ஜனவரி 2 - பண மதிப்பிழப்பு 

மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மேற்கொண்ட ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 58 மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஜனவரி 2-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அரசியல் சாசன அமர்வில், 4 நீதிபதிகள் பண மதிப்பிழப்பு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர்.

கருப்புப் பணத்தை ஒழித்தல், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களைக் கருத்தில் கொண்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அரசு நிர்வாகத்தின் பொருளாதார கொள்கைகளுக்குள் வருவதால் அதை ரத்து செய்ய இயலாது என்றும் பெரும்பாலான நீதிபதிகள் தெரிவித்தனர்.

பண மதிப்பிழப்பு சட்டத்துக்கு புறம்பானது என்றும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமே பண மதிப்பிழப்பு செய்ய அதிகாரம் உள்ளதாகவும் நீதிபதி வி.வி. நாகரத்னா தனது மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

பிப்ரவரி 23 - அதிமுக பொதுக்குழு 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு தீர்ப்பளித்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 23, ஜூலை 11-ஆம் தேதிகளில் அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை அப்போதைய இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டினார். இதில், ஜூலை 11 நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, இபிஎஸ்ஸை இடைக்காலப் பொதுச் செயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில் இபிஎஸ்ஸுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதி அமர்வில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், ஒரு நீதிபதி அமர்வு பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு இபிஎஸ்ஸுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மே 18 - ஜல்லிக்கட்டு விவகாரம்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெறும் நோக்கில் விலங்குகளைத் துன்புறுத்துவதற்குத் தடை விதித்து மத்திய அரசு 1960-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை தமிழக அரசு திருத்தி குடியரசுத் தலைவரிடம் 2014-ல் ஒப்புதல் பெற்றது.

இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பீட்டா வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2 - கோகுல்ராஜ் கொலை

கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், இருவரின் தண்டனையை மட்டும் 5 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.  

ஆகஸ்ட் 4 - ராகுல் காந்தி சிறைத் தண்டனை

மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

அவதூறு வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால், எம்பி பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 29 - வாச்சாத்தி வன்கொடுமை

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டம் கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள வாச்சாத்தி கிராமத்தில் நிகழ்ந்த வன்முறை, பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேருக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அக்டோபர் 17 - ஒரே பாலின திருமணம்

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

இதற்கான சட்டத்தை நாடாளுமன்றம்தான் இயற்ற வேண்டும் என்றும், ஒரே பாலின ஈர்ப்பாளர்களுக்கு சம உரிமை அளித்து சமுதாயத்தில் உள்ள பாகுபாடுகளை களைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

டிசம்பர் 11 - ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

மேலும், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அடுத்தாண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

டிசம்பர் 21 - பொன்முடி சிறைத் தண்டனை

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால், அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்தார்.

ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com