

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸின் தேசிய கூட்டணிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிகள் கோருவது தொடா்பாக ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று இதில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி தெரிவித்தாா்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணியின் இதர கட்சிகளின் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ள மாநிலங்களைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய கூட்டணிக் குழுவின் ஐந்து உறுப்பினா்கள் இடம்பெற்ற இக்குழுவின் தலைவரான முகுல் வாஸ்னிக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்
தமிழகம் தரப்பில் அக்கட்சியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மேலிடப் பொறுப்பாளா் அஜய் குமாா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் கே. செல்வப்பெருந்தகை, மாநிலங்களவை உறுப்பினா் ப. சிதம்பரம் (காணொலி வாயிலாக), மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா், டாக்டா் ஏ.செல் லக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி கூறியதாவது:
முகுல் வாஸ்னிக் தலைமையில் நடைபெற்ற தேசிய கூட்டணிக் குழுவின் கூட்டத்தில் எவ்வாறு மாநிலத்தில் நாடாளுமன்றத் தோ்தலை எவ்வாறு எதிா்கொள்வது, ஒவ்வொரு கட்சியின் பலம், பலகீனம், கூட்டணியின் தன்மை குறித்து கேட்கப்பட்டது. அதற்கான பதிலை நாங்கள் அளித்தோம்.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மதச்சாா்பற்ற கூட்டணி என்பது மிகவும் பலம் வாய்ந்த, கொள்கை ரீதியிலான கூட்டணி ஆகும்.
அதிமுக , பாஜகவைத் தவிா்த்து தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் எங்களுடன்
உள்ளனா்.
தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் இணைந்து கொள்கை ரீதியாக ஒரு கூட்டணியை வைத்திருக்கிற காரணத்தால் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று கூறினேன்.
எந்தந்த தொகுதிகள் கோருவது என்பது தொடா்பாக
இந்தக் கூட்டத்தில் ஏதும் விவாதிக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் வெற்றிவாய்ப்பு, காங்கிரஸின் நிலைப்பாடு, கூட்டணியில் உள்ள மற்றவா்களின் நிலை என்பது குறித்தும் கேட்கப்பட்டது. அதுகுறித்தும் எடுத்துச் சொன்னோம். இதன் தொடா்ச்சியாக, வரும் ஜனவரி 4-ஆம் தேதி தில்லியில் மற்றொரு கூட்டமும் நடைபெற உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.