ஒரு மாதமாகியும் ராஜஸ்தானில் அமைச்சரவை பதவியேற்காததன் காரணம்?

ராஜஸ்தானில் தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாதமாகிறது, பாஜக வெற்றி பெற்று 25 நாள்கள் ஆகியும், இதுவரை அமைச்சரவை பதவியேற்காமல் இருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
ஒரு மாதமாகியும் ராஜஸ்தானில் அமைச்சரவை பதவியேற்காததன் காரணம்?

ராஜஸ்தானில் தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாதமாகிறது, பாஜக வெற்றி பெற்று 25 நாள்கள் ஆகியும், இதுவரை அமைச்சரவை பதவியேற்காமல் இருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய முதல்வராக பாஜகவின் முதல் முறை எம்எல்ஏ பஜன்லால் சா்மா தோ்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் தலைமையில் புதிய அமைச்சரவையை கட்டமைக்க முடியாமல் பாஜக தலைமை திணறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வராக தேர்வாகியிருக்கும் பஜன்லால் சர்மா, துணை முதல்வர்கள் தியா குமாரி மற்றும் பிரேம்சந்த் பைர்வா ஆகியோருடன் இரண்டு முறை புது தில்லி சென்று, பல கட்ட ஆலோசனை நடத்திமுடித்திருந்தாலும் கூட, அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை தேர்வு செய்ய முடியவில்லை.

ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்காமல் காலதாமதம் ஆவதற்கு இதவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், பாஜகவின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவது என்னவென்றால், ஆர்எஸ்எஸ் தலையீடு, வசுந்தரா ராஜேவின் முரண்பாடு, மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் பல்வேறு சமுதாய மக்களின் எதிர்பார்ப்புகளையும் சமநிலைப்படுத்த வேண்டும் என்ற கட்சியின் தேடல் ஆகியவை, அமைச்சரவை உருவாக்கத்தில் முட்டுக்கட்டையாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும், இதே சிக்கலை பாஜக எதிர்கொண்டது. அங்கு ஓரளவுக்கு வேலை முடிந்துவிட்டாலும், ராஜஸ்தானில் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே புதன்கிழமை மாலை, மாநில கட்சித் தலைவர் சி.பி. ஜோஷி, முதல்வர் பஜன்லால் ஷர்மாலவை சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, புதிய அமைச்சரவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து ரத்தோர் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சரவை விரிவாக்கப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இது பாஜகவின் பணியாற்றும் ஸ்டைல். எங்களுடைய கட்சித் தலைமை, சில செயல்முறைகளை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது என்றார்.

அனைத்து சமுதாய மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக அமைச்சரவை இருப்பதை உறுதி செய்யும் வகையில், உருவாக்கப்படுவதாகவும், ஒரு சில நாள்களில், அல்லது ஒருசில மணி நேரத்தில் கூட அறிவிப்பு வெளியாகலாம் என்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை, முதல்வர் உள்பட அதிகபட்சமாக 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்கலாம். முதல்கட்டமாக 20 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்கும் என்றும், தலா 10 பேர் கேபினட் மற்றும் துறை அமைச்சர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. முதல்கட்டமாக 5 முதல் 7 பதவிகள் காலியாக விடப்படலாம். பிறகு, மக்களவைத் தேர்தல் முடிந்ததும் அவை நிரப்பப்படலாம். இதற்கிடையே, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் தில்லியில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள், தங்களது எதிர்காலம் குறித்து கவலை அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பஜன்லால் அணியில் 60 - 70 சதவீதம் பேர் புதிய முகங்கள். அமைச்சர் பதவிகள் குறித்து கட்சிக்குள் பல கருத்துவேறுபாடுகள் நிலவுவதாகவும், மாநில உள்துறை அமைச்சராக யாரை நியமிப்பது என்பதில்தான் மிகப்பெரிய இழுபறி நீடிப்பதாகவும், ஒரு முக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் அந்தப் பதவியை வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ராஜஸ்தான் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. ஒரு கட்சி பதவியேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்ய இத்தனை காலம் தாமதமாவது என்றும் கூறப்படுகிறது.

அரசியல் நிபுணர்கள் சில விஷயங்களை கணித்துள்ளனர். அதன்படி, புதிய அமைச்சரவை, பல புதிய முகங்களைக் கொண்டிருக்கும் என்றும், இதுவரை அமைச்சராக இல்லாதவர்கள் அமைச்சரவையில் இணைக்கப்படலாம் என்கிறார்கள். முதல் முறையாக எம்எல்ஏவாகியிருக்கும் பஜன்லால், முதல்வர் பதவியை ஏற்றிருப்பதால், மூத்த தலைவர்கள் அமைச்சரவையில் இருப்பதை கட்சித் தலைமை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் 115 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 69 இடங்கள் கிடைத்தன. பாரத ஆதிவாசி கட்சி 3, பகுஜன் சமாஜ் 2, ராஷ்ட்ரீய லோக் தளம், ராஷ்ட்ரீய லோக்தாந்திரிக் கட்சி தலா ஓரிடத்தைக் கைப்பற்றின. 8 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனா்.

இதையடுத்து, புதிய முதல்வராக பாஜகவின் முதல் முறை எம்எல்ஏ பஜன்லால் சா்மா தோ்வு செய்யப்பட்டு, அவரது தலைமையிலானஅரசு அண்மையில் பதவியேற்றது.

இந்நிலையில், சட்டப் பேரவைத் தலைவராக 5 முறை பாஜக எம்எல்ஏவும், சிந்தி சமூகத்தைச் சோ்ந்தவருமான வாசுதேவ் தேவ்னானியை தோ்வு செய்யும் முன்மொழிவை, முதல்வா் பஜன்லால் சா்மா பேரவையில் தாக்கல் செய்தாா். அதை காங்கிரஸ் எம்எல்ஏ சச்சின் பைலட் வழிமொழிந்தாா். பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது. பேரவைத் தலைவராக வாசுதேவ் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com