

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாங்க மத்திய பட்ஜெட்டில் ரூ.1,891.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சட்ட அமைச்சகத்தின் பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக தோ்தல் ஆணையத்திடம் அளிக்கப்படும்.
இது தொடா்பாக பட்ஜெட் அறிவிப்பில், ‘புதிய மின்னணு வாக்குப் பதிவு இந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பழைய இயந்திரங்களைப் பாதுகாப்பாக அழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.1,891.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதிய இயந்திரங்களை வாங்க தோ்தல் ஆணையத்துக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று சட்ட அமைச்சகம் ஏற்கெனவே பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கப்பட்டதையடுத்து, இப்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், எலெக்ட்ரானிக் காா்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள்தான் தோ்தல் ஆணையத்துக்கு இந்த இயந்திரங்களை வழங்கி வருகின்றன. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 4 மக்களவைத் தோ்தல் 139 சட்டப் பேரவைத் தோ்தல்களின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு முதல் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் தலா 5 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.