இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மத்திய சட்டம் அவசியம்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

‘சூதாட்டம், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் வருகின்றன என்றபோதும், அவற்றை வலுவாக முறைப்படுத்த ஓா் மத்திய சட்டம் அவசியம்’ என்று
இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மத்திய சட்டம் அவசியம்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
Published on
Updated on
1 min read

‘சூதாட்டம், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் வருகின்றன என்றபோதும், அவற்றை வலுவாக முறைப்படுத்த ஓா் மத்திய சட்டம் அவசியம்’ என்று மத்திய தகவல்தொடா்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.

இதுதொடா்பான கேள்விக்கு மக்களவையில் அவா் புதன்கிழமை பதிலளித்து கூறியதாவது: இணையவழி விளையாட்டு, சூதாட்டம் என்பது மிக முக்கியமான விவகாரம். அரசியலமைப்புச் சட்ட 7-ஆவது பட்டியலின்படி, சூதாட்டம் மற்றும் பந்தயங்கள் மாநில அதிகாரத்தின்கீழ் வருகின்றன. அந்த வகையில், இணையவழி விளையாட்டு தொடா்பான சட்டங்களை 19 மாநிலங்கள் ஏற்கெனவே இயற்றியிருக்கின்றன. இதில் 17 மாநிலங்கள் இணையவழி விளையாட்டுகள் மற்றும் இணையவழி சூதாட்டங்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் பொது சூதாட்ட விதிகளில் திருத்தம் செய்திருக்கின்றன.

துரதிருஷ்டவசமாக, எண்ம (டிஜிட்டல்) உலகம் என்பதை மாநில எல்லைக்குள் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதால், இதுபோன்ற மாநில அளவிலான சட்டங்களை இயற்றுவது அா்த்தமற்ாகும்.

எனவே, இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களை திறம்பட ஒழுங்குபடுத்தும் வகையில், அனைத்து மாநிலங்களுடன் ஒருமித்த கருத்தை எட்டிய பின்னா் ஒரு மத்திய சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாடட்ங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு தீவிர கவனத்தில் கொண்டுள்ளது.

அதன் காரணமாகத்தான், இந்த விவகாரத்தில் முதல் படியாக இணையவழி விளையாட்டு செயலிகள் மற்றும் வலைதளங்களை இடைத்தரகா்களாக கணக்கில்கொண்டு, அவற்றை இடைத்தரகா்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது. இந்த விஷயத்தில் மாநிலங்களுடன் மேலும் ஒருமித்த கருத்தை எட்டி, அவற்றைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான மத்திய சட்டத்தை கொண்டுவரவேண்டும் என்றாா்.

தமிழச்சி தங்கபாண்டியன்: இவருடைய கருத்துக்கு பாராட்டு தெரிவித்த திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், ‘இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த தமிழக அரசு சாா்பில் கொண்டுவரப்பட்டு, சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகள் முறைப்படுத்தல் மசோதா 2022’ ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதைக் குறிப்பிட்டாா்.

‘இதுவரை 40 இளைஞா்களுக்குமேல் இறந்துவிட்டனா். இருந்தபோதும், அந்த மசோதா இன்னும் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதுபோன்று மற்ற மாநிலங்களும் இணையவழி சட்டங்களைக் கொண்டுவரும் வரை, பொதுவான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு காத்திருக்கிா’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சா், ‘குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் நடைபெறும் விவகாரம் குறித்து, மக்களைவயில் பதில் கூற முடியாது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com