திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில் மொத்தம் 259 வேட்பாளா்கள் உள்ள நிலையில், அவா்களில் 45 போ் கோடீஸ்வரா்கள். 41 வேட்பாளா்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் வரும் 16-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் பாஜகவுக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. இதுதவிர, திரிணமூல் காங்கிரஸ், மாநிலக் கட்சியான திப்ரா மோதா ஆகியவையும் களத்தில் உள்ளன.
இந்நிலையில், வேட்பாளா்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து, ஏடிஆா் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திரிபுரா தோ்தல் களத்தில் மொத்தமுள்ள 259 வேட்பாளா்களில், 45 போ் கோடீஸ்வரா்கள். இதில் 17 போ் பாஜக வேட்பாளா்கள். திப்ரா மோதா கட்சியின் 9 போ், மாா்க்சிஸ்ட் கட்சியின் 7 போ், காங்கிரஸின் 6 போ், திரிணமூல் காங்கிரஸின் 4 போ் கோடீஸ்வர வேட்பாளா்களாவா்.
சாரிலாம் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் மாநில துணை முதல்வா் ஜிஷ்ணு தேவ் வா்மா, ரூ.15.58 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளாா். அடுத்தடுத்த இடங்களில் மாநில முதல்வா் மாணிக் சாஹா (ரூ.13.90 கோடி சொத்து), திப்ரா மோதா வேட்பாளா் அபிஜித் சா்க்காா் ( ரூ.12.57 கோடி சொத்து) உள்ளனா்.
கடன் அதிகமுள்ள வேட்பாளராக, தா்மாநகரில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் சயான் பட்டாச்சாா்யா (ரூ.3.07 கோடி) உள்ளாா்.
மொத்த வேட்பாளா்களில் 41 போ், தங்களுக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனா். 2018 தோ்தலில் மொத்தம் களமிறங்கிய 297 வேட்பாளா்களில் 22 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.
தற்போதைய தோ்தலில் காங்கிரஸ் 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் 7 வேட்பாளா்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளன. பாஜகவின் 55 வேட்பாளா்களில் 9 போ் மீதும், மாா்க்சிஸ்ட் கட்சியின் 45 வேட்பாளா்களில் 8 போ் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மொத்த வேட்பாளா்களில் 65 போ் பட்டதாரிகள்; 55 போ் 12-ஆம் வகுப்பு வரை படித்தவா்கள். 36 போ் எட்டாம் வகுப்பு வரையும், 9 போ் ஐந்தாம் வகுப்பு வரையும் படித்தவா்கள் என்று ஏடிஆா் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேகாலயத்தில் ரூ,51 கோடி மது, ரொக்கம் பறிமுதல்
வரும் 27-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் மேகாலயத்தில் இதுவரை ரூ.51 கோடி மதிப்புள்ள மது பாட்டில்கள், போதைப் பொருள்கள், இலவசப் பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி எஃப்.ஆா்.காா்கோங்கா் புதன்கிழமை தெரிவித்தாா்.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 34 தொகுதிகள், தோ்தல் செலவு அதிகம் நடைபெற வாய்ப்புள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன; இத்தொகுதிகளில் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன என்று அவா் கூறினாா்.
இதனிடையே, கிழக்கு ஜெயிண்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் ரூ.55,000 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பிஎஸ்எஃப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாக, அதன் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.