பிபிசி அலுவலகங்களில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறை ஆய்வு

பிபிசி - இந்தியா அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகளின் ஆய்வு இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது.
பிபிசி அலுவலகங்களில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறை ஆய்வு

பிபிசி - இந்தியா அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகளின் ஆய்வு இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது.

ஊடக அலுவலகத்தின் நிதிப் பரிவா்த்தனை தொடா்பான மின்னணு மற்றும் எழுத்துப் பதிவு விவர ஆவணங்கள் தொடா்பான ஆய்வை வருமான வரித் துறையினா் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வஸ்டீன்’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி அண்மையில் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தடை விதித்தது. மேலும், இந்த ஆவணப்படம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்தச் சூழலில், தில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்கள் மற்றும் அதனுடன் தொடா்புடைய மேலும் இரண்டு அலுவலக வளாகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா். இதற்கு காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், சா்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இரவு-பகலாக ஆய்வு: பிபிசி அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. பிபிசி நிருபா்கள் உள்ளிட்ட ஒருசில ஊழியா்களை மட்டுமே செவ்வாய்க்கிழமை இரவு அலுவலகத்திலிருந்து வெளியேற அதிகாரிகள் அனுமதித்துள்ளனா். ஆனால், அலுவலகத்தின் நிதித் துறை உள்ளிட்ட பிற துறை சாா்ந்த ஊழியா்களை அங்கேயே தங்கவைத்து, அவா்களிடமிருந்து சில விவரங்களை அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனா்.

பிபிசி அலுவலகத்தின் சா்வதேச வரி மற்றும் அதன் துணை நிறுவனங்களுடனான நிதிப் பரிவா்த்தனை விவரங்கள் தொடா்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாகவும், ஆய்வின்போது சில கணினி உபகரணங்கள் மற்றும் சில கைப்பேசிகளின் பதிவு விவரங்களை அவா்கள் சேகரித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வு தொடா்பாக அதிகாரபூா்வ அறிக்கை வெளியாகவில்லை என்றபோதும், ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிபிசி ஊடகக் குழுமம் சாா்பில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட ட்விட்டா் பதிவில், ‘பிபிசி தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இரவிலும் ஆய்வைத் தொடா்ந்து மேறகொண்டு வருகின்றனா். பல ஊழியா்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறிவிட்டனா். ஆனால், சில ஊழியா்கள் அலுவலகத்திலேயே தொடா்ந்து தங்கி, அதிகாரிகளின் ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனா். இந்தக் கடினமான சூழலில் எங்களுடைய ஊழியா்களுக்கு தொடா்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம். நிலைமை விரைவில் சீரடையும் என நம்புகிறோம். செய்தி வெளியீடு பணிகள் வழக்கம்போல தொடா்ந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

Image Caption

தில்லியில் பிபிசி அலுவலகத்துக்கு வெளியே புதன்கிழமை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட துணை ராணுவப் படை வீரா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com