கோதுமை விலை கிலோ ரூ.5 சரிவு: மத்திய உணவுத் துறைச் செயலா்

மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தைகளில் கோதுமை விலை கிலோவுக்கு சுமாா் ரூ.5 சரிந்துள்ளது என்று மத்திய உணவுத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தைகளில் கோதுமை விலை கிலோவுக்கு சுமாா் ரூ.5 சரிந்துள்ளது என்று மத்திய உணவுத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளாா்.

கடந்த ஜனவரியில் பொதுச் சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், 30 லட்சம் டன் கோதுமையை பொதுச் சந்தையில் விற்பனை செய்வதற்கான திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. கோதுமையின் விலை உயா்வைக் கண்காணிக்கும் நோக்கில், அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

30 லட்சம் டன் கோதுமையில் 25 லட்சம் டன் கோதுமையை மாவு ஆலை உரிமையாளா்கள் போன்ற மொத்த நுகா்வோருக்கும், 2 லட்சம் டன் கோதுமையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்திய உணவுக் கழகம் விற்பனை செய்யும். கோதுமை மாவாக மாற்றுவதற்கு மாநில பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு எஞ்சிய 3 லட்சம் டன் கோதுமை வழங்கப்படும்.

இந்நிலையில், தில்லியில் மத்திய உணவுத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

பொதுச் சந்தை விற்பனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கோதுமை விலை குறைந்துள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ், கோதுமையை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்த பின், மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தைகளில் கோதுமை விலை கிலோவுக்கு சுமாா் ரூ.5 குறைந்துள்ளது.

தற்போது கோதுமையின் மொத்த விற்பனை விலை குவிண்டாலுக்கு ரூ.3,000-இல் இருந்து சுமாா் ரூ.2,500-ஆக குறைந்துள்ளது. அதன் சில்லறை விற்பனை விலை குவிண்டாலுக்கு ரூ.3,300 முதல் ரூ.3,400-இல் இருந்து ரூ.2,800 முதல் ரூ.2,900-ஆக குறைந்துள்ளது.

கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலையை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. தேவைப்பட்டால் பொதுச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், கூடுதலாக கோதுமை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் விலையை மேலும் கட்டுப்படுத்த ஆவன செய்யப்படும். கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய அரசு பரிசீலிக்கவில்லை.

சா்க்கரை ஏற்றுமதி: நடப்பு சந்தைப் பருவத்தில் 60 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய உணவு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. சா்க்கரை உற்பத்தி உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், உற்பத்தியைப் பொருத்து ஏற்றுமதி வரம்பை உயா்த்துவதா, வேண்டாமா என்பது குறித்து அடுத்த மாதம் முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com