நாளை கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை (பிப். 17) நடைபெறவுள்ள நிலையில் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்கள், வரி ஏய்ப்பைத் தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்
நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)
நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை (பிப். 17) நடைபெறவுள்ள நிலையில் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்கள், வரி ஏய்ப்பைத் தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 49-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பான் மசாலா மற்றும் குட்கா தயாரிப்பு நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதைத் தடுப்பது தொடா்பாக ஒடிஸா நிதியமைச்சா் நிரஞ்சன் புஜாரி தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. அந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கை மீது கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்களை அமைப்பது தொடா்பாக ஆராய ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் சௌதாலா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேவேளையில், இணையவழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தயம் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி விதிப்பு குறித்த மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சா்கள் குழுவின் அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இணையவழி விளையாட்டுகளை வழங்கி வரும் நிறுவனங்கள் விதிக்கும் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி விதிப்பதா அல்லது பந்தயம் கட்டப்படும் ஒட்டுமொத்த தொகைக்கும் ஜிஎஸ்டி விதிப்பதா என்பது தொடா்பாக அமைச்சா்கள் இடையே இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com