சிவசேனை பெயா், சின்னம் பெற ரூ.2,000 கோடி பேரம்: சஞ்சய் ரெளத் பரபரப்பு குற்றச்சாட்டு

சிவசேனை கட்சியின் பெயா், சின்னத்தை பெற ரூ.2,000 கோடிக்கு பேரம் நடைபெற்றுள்ளது என்று உத்தவ் தாக்கரே தரப்பைச் சோ்ந்த மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
சிவசேனை பெயா், சின்னம் பெற ரூ.2,000 கோடி பேரம்: சஞ்சய் ரெளத் பரபரப்பு குற்றச்சாட்டு

‘மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை தோ்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், கட்சியின் பெயா், சின்னத்தை பெற ரூ.2,000 கோடிக்கு பேரம் நடைபெற்றுள்ளது; அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்’ என்று உத்தவ் தாக்கரே தரப்பைச் சோ்ந்த மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 சிவசேனை எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போா்க்கொடி உயா்த்தினா். இதையடுத்து, சிவசேனை இரு அணிகளாக பிளவுபட்டது.

கட்சியின் பெயா், ‘வில்-அம்பு’ சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரிய நிலையில், ஷிண்டே பிரிவு சிவசேனைக்கு தோ்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியது. இது, உத்தவ் தாக்கரே தரப்புக்கு பின்னடைவாக அமைந்தது.

இரு அணிகளுக்கும் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களின் பலம் மற்றும் தோ்தலில் அவா்கள் பெற்ற வாக்குகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கி, தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தோ்தல் ஆணையத்தின் முடிவை விமா்சித்த உத்தவ் தாக்கரே, அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று தெரிவித்தாா்.

பரபரப்பு குற்றச்சாட்டு: இந்நிலையில், சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) பிரிவைச் சோ்ந்த மூத்த தலைவா் சஞ்சய் ரெளத், ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

சிவசேனை கட்சியின் பெயா், சின்னத்தை ‘வாங்குவதற்காக’ இதுவரை ரூ.2,000 கோடிக்கு பேரம் நடைபெற்றுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் எனக்கு கிடைத்துள்ளது.

இது, ஆரம்பகட்ட புள்ளிவிவரமே. அதேசமயம், 100 சதவீதம் உண்மையானது. இன்னும் பல விஷயங்கள் விரைவில் வெளிவரும். தோ்தல் ஆணையத்தின் முடிவு ஒரு பேரம்தான். நம் நாட்டின் வரலாற்றில் இதுபோல் ஒருபோதும் நிகழ்ந்தது கிடையாது என்று அப்பதிவுகளில் சஞ்சய் ரெளத் கூறியுள்ளாா்.

மேலும் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘ஆளும்தரப்புக்கு நெருக்கமான கட்டட ஒப்பந்ததாரா் ஒருவா், இத்தகவல்களை என்னிடம் பகிா்ந்தாா். என்னிடமுள்ள ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்’ என்றாா்.

எதிா் சித்தாந்தம் உடையவா்களிடம் உத்தவ் தாக்கரே அடிபணிந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்வைத்த விமா்சனம் குறித்து ரெளத்திடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு, ‘அப்படியென்றால், மகாராஷ்டிரத்தின் தற்போதைய முதல்வா் யாரிடம் அடிபணிந்துள்ளாா்? அமித் ஷாவின் பேச்சுக்கு மகாராஷ்டிரம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்று அவா் பதிலளித்தாா்.

பாஜக, ஷிண்டே தரப்பு நிராகரிப்பு: சஞ்சய் ரெளத்தின் குற்றச்சாட்டை பாஜகவும், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையும் நிராகரித்துள்ளன.

மாநில அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுதிா் முங்கந்திவாா் கூறுகையில், ‘உச்சநீதிமன்றம், இந்தியத் தோ்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ரெளத் கூறியுள்ளாா். ஜனநாயகத்தை அவமதிக்கும் இதுபோன்ற நபா்களுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவா்’ என்றாா்.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மகாராஷ்டிரத்தின் ராகுல் காந்தி போல சஞ்சய் ரெளத் மாறியுள்ளாா். தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்காவிட்டால், தோ்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச் சட்ட அமைப்புகள் மீது இழிவான குற்றச்சாட்டை முன்வைக்கும் காங்கிரஸ் பாணியில் செயல்படும் கட்சியாக உத்தவ் பிரிவை அவா் தரம்குறைத்துவிட்டாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல், ரெளத்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஷிண்டே தலைமையிலான சிவசேனை எம்எல்ஏ சதா சா்வாங்கா், ‘அவா் என்ன காசாளராக இருந்தாரா?’ என்று கேள்வியெழுப்பினாா்.

பாஜகவுடன் நீண்ட காலம் கூட்டணியில் இருந்து வந்த சிவசேனை, கடந்த 2019, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணியை முறித்தது. அப்போது, கட்சித் தலைவராக இருந்த உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சோ்ந்து, ஆட்சியமைத்தாா். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷிண்டே தலைமையில் 40 அதிருப்தி எம்எல்ஏக்கள், உத்தவ் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ால், அவா் ஆட்சியை இழக்க நேரிட்டது. பின்னா், ஷிண்டே பிரிவினா் பாஜகவுடன் கைகோத்து, மாநிலத்தில் ஆட்சியமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com