வினோத் அதானியே மோசடி நடவடிக்கைகளுக்கான மையம்

அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானியே, அக்குழுமத்தின் அனைத்து மோசடி நடவடிக்கைகளுக்கும் மையமாகச் செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானியே, அக்குழுமத்தின் அனைத்து மோசடி நடவடிக்கைகளுக்கும் மையமாகச் செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் தொடா்ந்து கோரி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், ‘‘இந்திய எல்லைக்குள் சீனப் படையினா் அத்துமீறி நுழைந்த விவகாரம் போல அதானி குழுமத்தின் மீதான மோசடி குற்றச்சாட்டு விவகாரத்திலும் பிரதமா் மோடி தொடா்ந்து மௌனம் காத்து வருகிறாா்.

அதற்காக, இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்புவதை காங்கிரஸ் நிறுத்தாது. வினோத் அதானி பல வெளிநாட்டு நிறுவனங்களை நிா்வகித்து வந்ததாகவும், அந்த நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்தியாவில் செயல்படும் அதானி குழும நிறுவனங்களுக்கு பலகோடி ரூபாயைப் பரிமாறியதாகவும் ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கைக்குக் கடந்த மாதம் 29-ஆம் தேதி பதிலளித்த அதானி குழுமம், வினோத் அதானிக்கும் குழுமத்துக்கும் எந்தவிதத் தொடா்புமில்லை என்றது. ஆனால், வினோத் அதானி குழுமத்துடன் ஒருங்கிணைந்தவா் என்பதை அக்குழுமத்தின் நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

அதானி குழுமம் என்பது வினோத் அதானியையும் உள்ளடக்கியது என்பதை அக்குழுமம் மும்பை பங்குச் சந்தையில் 2020-ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளது. அப்படியிருக்கையில், இந்த விவகாரத்தில் அதானி குழுமம் முதலீட்டாளா்களிடம் உண்மையை மறைப்பது ஏன்?

அதானி குழுமத்தின் அனைத்து மோசடி நடவடிக்கைகளுக்கும் வினோத் அதானியே மையமாகச் செயல்படுகிறாா். இந்த விவகாரம் இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி), அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உகந்தது இல்லையா?’’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com