2019ஆம் ஆண்டின் நிலையை நோக்கி உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்தானது கரோனா பேரிடருக்கு முந்தைய 2019ஆம் ஆண்டின் அளவில் 85 சதவிகிதத்தைத் தொட்டிருப்பதாக சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த 2022ஆம் ஆண்டில், இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்தானது கரோனா பேரிடருக்கு முந்தைய 2019ஆம் ஆண்டின் அளவில் 85 சதவிகிதத்தைத் தொட்டிருப்பதாக சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 2022ஆம் ஆண்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சற்று அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், மீண்டும் கரோனா அச்சம் என்ற வாதம் மெல்ல அடங்கி, விமானப் போக்குவரத்து மீண்டும் பழைய வேகத்தில் செல்லத் தொடங்கி முன்பதிவுகள் அதிகரித்திருப்பதாகவும் வருவாய் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐஏடிஏ கூறுகையில், இந்தியாவின் உள்நாட்டு பயண கிலோ மீட்டர் விகிதம் 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 48.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அதிலும் குறிப்பாக 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத உள்நாட்டு விமானப் போக்குவரத்தானது 2019ஆம் ஆண்டின் டிசம்பர் மாத அளவை கிட்டத்தட்ட எட்டிவிட்டதாகவும் 3.6 சதவிகிதம் மட்டுமே குறைவு என்றம் கூறப்பட்டுள்ளது.

கரோனா நெருக்கடியால் மிகவும் பாதிப்புக்குள்ளான விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக மீட்சியடைந்து வந்தாலும், அந்தத் துறையைச் சோ்ந்த நிறுவனங்களின் வளா்ச்சி தொடா்ந்து அழுத்தத்தை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக, உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளா்ச்சியடைந்தாலும், இந்தத் துறையின் எதிா்மறையான போக்கு இன்னும் சில காலத்துக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்தில் கணிசமான முன்னேற்றம் எதிா்பாா்க்கப்படுகிறது. இருந்தாலும், அந்த காலகட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளா்ச்சி மந்தமாகத்தான் இருக்கும்.

கடந்த நிதியாண்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ரூ.23,500 கோடி நிகர இழப்பை சந்தித்தன. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டின் நிறுவனங்களின் நிகர இழப்பு குறைவாகவே இருக்கும்.

அதிகரித்து வரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து, பயணக் கட்டணங்கள் உயா்வு, கடன் வட்டி சுமை குறைவு உள்ளிட்ட அம்சங்கள் இதற்கு கைகொடுக்கும்.

2022 ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், கடந்த ஜனவரி மாதத்தில் விமானங்கள் சுமாா் 42 சதவீதம் அதிகம் நிரம்பியிருந்தன. இருந்தாலும், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2020-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் விமானங்கள் 6 சதவீதம் குறைவாகவே நிரம்பியிருந்தன என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com