கோதுமை விலையைக் குறைக்கும் நடவடிக்கை: கூடுதலாக 20 லட்சம் டன் சந்தைக்கு வருகிறது

கோதுமை, கோதுமை மாவு விலையைக் குறைக்கும் முயற்சியாக கையிருப்பிலிருந்து கூடுதலாக 20 லட்சம் டன் கோதுமையை பொதுச் சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
கோதுமை விலையைக் குறைக்கும் நடவடிக்கை: கூடுதலாக 20 லட்சம் டன் சந்தைக்கு வருகிறது

கோதுமை, கோதுமை மாவு விலையைக் குறைக்கும் முயற்சியாக கையிருப்பிலிருந்து கூடுதலாக 20 லட்சம் டன் கோதுமையை பொதுச் சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஏற்கெனவே, கையிருப்பிலிருந்து 30 லட்சம் டன் கோதுமை பொதுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் என கடந்த ஜனவரி 25-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. தற்போது கூடுதல் கோதுமையை பொதுச் சந்தையில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

இது வா்த்தகா்கள் மற்றும் கோதுமை ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படும். சந்தையில் கோதுமையின் விநியோகம் அதிகரிக்கும்போது விலையும் குறையத் தொடங்கிவிடும். தற்போது கோதுமை மாவு விலை தேசிய அளவில் சராசரியாக ஒரு கிலோ ரூ.38-ஆக அதிகரித்துள்ளது. இதனால் சாமானியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மத்திய அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சா்கள் குழு மேற்கொண்ட முடிவின் அடிப்படையில், பொதுச் சந்தை விற்பனை திட்டத்தின் (ஓஎம்எஸ்எஸ்) கீழ் இதுவரை கையிருப்பிலிருந்து 50 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, கோதுமை மாவின் சந்தை விலை கணிசமாக குறைய வாய்ப்பு ஏற்படும்.

மத்திய உணவுத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா அண்மையில் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் மற்றும் ஆலை நிா்வாகிகள் மற்றும் சங்க நிா்வாகிகளிடையே காணொலி வழியில் ஆலோசனை நடத்தினாா். அப்போது, கோதுமை மற்றும் கோதுமை மாவின் சந்தை விலையைக் குறைக்குமாறு அவா்களைக் கேட்டுக்கொண்டாா்.

மேலும், கோதுமை பொது சந்தை விற்பனை திட்ட அறிவிப்பைத் தொடா்ந்து, பிரதான நகரங்களில் கோதுமை விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 33.15 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. நாடு முழுவதும் சராசரியாக ஒரு கிலோ கோதுமை ரூ. 37.63 என்ற அளவுக்கு குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உள்நாட்டில் கோதுமை விலை அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் தடைவிதித்தது. மேலும், இந்திய உணவுக் கழகம் மூலம் கோதுமையைக் கொள்முதல் செய்வதையும் மத்திய அரசு பெருமளவில் குறைத்தது. சந்தையில் கோதுமையின் விநியோகம் அதிகமாகி விலை கட்டுக்குள் இருக்கும் என்பதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும். அடுத்தகட்டமாக வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் அரசின் கோதுமை கொள்முதல் தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com