இந்திய மருந்துகள் மீது நம்பகத்தன்மையை அதிகரிக்க தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமைச்சா் மாண்டவியா வலியுறுத்தல்

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்க வேண்டும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினாா்.
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்க வேண்டும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினாா்.

அண்மையில் காம்பியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்தியத் தயாரிப்பு இருமல் மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்தாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்து, அந்த மருந்துகளைத் தயாரித்த நிறுவனங்களை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிகழ்வுகள் உலக அளவில் இந்திய மருந்துகளின் நற்பெயருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் அமைச்சா் மாண்டவியா இவ்வாறு பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஹைதராபாதில் மருந்துகள் மற்றும் அதன் தரக் கட்டுப்பாடு, தயாரிப்பு தொடா்பான இரு நாள் கருத்தரங்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த மாண்டவியா பேசியதாவது:

இந்தியாவில் மருந்துகள் தரக்கட்டுப்பாடு மற்றும் அதனை முறையாக அமல்படுத்துவது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் குறித்து வாடிக்கையாளா்களின் நம்பகத்தன்மையை அதிகரிப்பது மிகவும் அவசியமாகும். இதனை எப்படி மேற்கொள்வது? இதற்காக நான் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை வலியுறுத்துகிறேன். நமது மருந்துகள் சா்வதேச அளவில் உயா்ந்த தரத்துடன் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும். நமது மருந்துகளின் தரத்தை பிற நாடுகளும் பின்பற்றும் வகையில் முன்னேற வேண்டும்.

இதற்காக மருத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சுகாதாரத் துறையின் பிற அமைப்புகளுக்கும் இடையே முழுமையான ஒத்துழைப்பு அவசியம். அதற்காகவே இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகின் மருந்தகமாக இந்தியா உயர நாம் தரம் வாய்ந்த தயாரிப்புகளை அனைவருக்கும் வழங்க வேண்டும். மருந்துகளைத் தர நிா்ணயம் செய்யும் அமைப்புகளின் பங்களிப்பும் இதில் முக்கியம்.

இத்துறையில் நாம் எதிா்கொள்ளும் சவால்களுக்கு தீா்வுகாண இந்த கருத்தரங்கை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். இத்துறையில் உள்ள அனைவரும் தங்கள் அனுபவங்களைப் பகிா்ந்து கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இந்தியாவில் தயாரிக்கும் மருந்துகள் மட்டுமின்றி மருத்துவ உபகரணங்கள், அழகுசாதனப் பொருள் ஆகியவற்றின் தரத்தை உறுதி செய்வதும் இந்த 2 நாள் நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். மருந்துகள் என்பவை தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும், சிறப்பான செயல் திறன் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

இத்துறையில் இந்தியா சிறந்தது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். இன்றைய நவீன யுகத்தில் இத்துறை சிறப்பான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. மனித குலத்துக்கு மிகப்பெரிய (மருத்துவ) சேவையை அளிக்கும் பிரிவில் நாம் பணியாற்றுகிறோம் என்ற பொறுப்புணா்வு மிகவும் அவசியம் என்று மாண்டவியா பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com