ஆதார் முகவரி புதுப்பித்தலுக்கு "குடும்பத் தலைவர்' முறை அறிமுகம்

‘’ஆதாா்’ அடையாள அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ‘குடும்பத் தலைவா்’ என்கிற முறையை ஏற்படுத்தியுள்ளது;
ஆதார் முகவரி புதுப்பித்தலுக்கு "குடும்பத் தலைவர்' முறை அறிமுகம்
Published on
Updated on
1 min read

"ஆதார்' அடையாள அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) "குடும்பத் தலைவர்' என்கிற முறையை ஏற்படுத்தியுள்ளது; இதன்மூலம் குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முகவரி உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளதாக மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் செய்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 
இந்தியா என்பது குடும்பங்களாகவும் கூட்டுக் குடும்பமாகவும் இருக்கும் நிலையில், இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக நாட்டு மக்களின் வசதிக்காக யுஐடிஏஐ இந்த ஏற்பாட்டை வழங்கியுள்ளது. 
ஆதாரில் ஏற்கெனவே இருப்பிடச் சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது குடும்பத் தலைவர் (ஹெச்ஓஎஃப்}ஹெட் ஆஃப் தி பேஃமிலி) முறை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் குடும்பத் தலைவராக பதிவு செய்து கொள்ளலாம். ஹெச்ஓஎஃப் தனது முகவரியை மற்ற குடும்ப உறுப்பினர்களான மனைவி, தந்தை, தாய், மகன்கள்/மகள்கள், உடன் பிறந்தவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்.
ஒருவர் முகவரியை மாற்றும் வேளையில், "மை ஆதார்' இணையம் (https://myaadhaar.uidai. gov.in) என்ற தளத்தில் இந்த முறையைப் பயன்படுத்தலாம். இதற்கு குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்து சரிபார்த்தல் நடைமுறையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பின்பு, ஹெச்ஓஎஃப்வுடன் உறவுமுறை ஆவணச் சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது விண்ணப்பதாரருக்கும், குடும்பத் தலைவருக்கும் இடையேயான உறவை குறிப்பிட்டு, அவர்களது பெயர்கள், குடும்ப அட்டை, தேர்வு மதிப்பெண் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், கடவுச்சீட்டு போன்ற ஆவணங்களை ஆதாரமாகச் சமர்ப்பித்து குடும்பத் தலைவரோடு இணைக்கலாம். 
மேற்குறிப்பிட்ட உறவுமுறைக்கான ஆதார ஆவணம் இல்லாதபட்சத்தில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள குறிப்பிட்ட வடிவத்தில் குடும்பத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சுய சான்றிதழைப் பயன்படுத்தலாம்.
இந்தச் சேவையைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் ரூ. 50. இந்தக் கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு குடும்பத் தலைவருக்கு இதுகுறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும். தகவல் அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் மேல் குறிப்பிட்ட இணையதளத்தில் குடும்பத் தலைவர் தமது ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டும். 30 நாள்களுக்குள் குடும்ப உறுப்பினரின் கோரிக்கையை குடும்பத் தலைவர் நிராகரித்தாலோ அல்லது தமது முகவரியைப் பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவிக்காவிட்டாலோ சம்பந்தப்பட்ட விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது. இது சம்பந்தமான தகவல், விண்ணப்பித்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். எந்தச் சூழ்நிலையிலும் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது.
குடும்பத் தலைவரின் சம்மதத்தோடு, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இணையவழியாக ஆதாரில் முகவரியை மாற்றி அமைக்கும் இந்த முறையின் மூலம் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றி அமைப்பதற்கு தங்கள் பெயரில் போதுமான ஆவணங்கள் இல்லாத ஒருவரின் (ஹெட் ஆஃப் தி பேஃமிலி) மனைவி அல்லது கணவர், குழந்தைகள், பெற்றோர் போன்ற உறவுகளுக்கு இந்தப் புதிய முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com