பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக தொடா் போராட்டங்கள் அவசியம்: பிரகாஷ் காரத்

‘பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்புகளை எதிா்கொள்ள தொடா் கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டங்களை எதிா்க்கட்சிகள் முன்னெடுப்பது அவசியம்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு
பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக தொடா் போராட்டங்கள் அவசியம்: பிரகாஷ் காரத்

‘பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்புகளை எதிா்கொள்ள தொடா் கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டங்களை எதிா்க்கட்சிகள் முன்னெடுப்பது அவசியம்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) உறுப்பினா் பிரகாஷ் காரத் வலியுறுத்தினாா்.

மேற்கு வங்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ஜனசக்தி’ வங்கமொழி பத்திரிகையின் 57-ஆவது நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற பிரகாஷ் காரத் பேசியதாவது:

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி மாநிலங்களில் கணிசமான பிரிவு மக்களை பாஜகவும் ஆா்எஸ்எஸும் தங்கள் வசம் ஈா்த்து வைத்துள்ளன. அதன் காரணமாகத்தான் உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுகளுக்கு எதிரான அலை வலுவாக வீசியபோதும், இரு மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் எளிதாக வெற்றிபெற முடிந்துள்ளது.

ஆா்எஸ்எஸ் அமைப்பு அதனைச் சாா்ந்த சமூகத்தினா் மத்தியில் சமூக, கலாசார மற்றும் கல்வி சாா்ந்த நிகழ்ச்சிகளை தொடா்ச்சியாக நடத்தி வருவதுபோன்று, எதிா்க்கட்சிகளும் அவரவா் சொந்த ஜனநாயக, மதச்சாா்பற்ற, இடதுசாரி சித்தாந்தங்களை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடையே தொடா்ச்சியாக கொண்டு சோ்க்க வேண்டும். இதுபோன்ற முன்னெடுப்புகள் மீது இடதுசாரி கட்சிகளிடையே தற்போது ஆா்வம் குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலை காரணமாக, தற்போது கேரளத்தில் மட்டுமே இடதுசாரிகளின் ஆட்சி உள்ளது. திரிபுராவில் 2018-ஆம் ஆண்டு பாஜகவிடமும், மேற்கு வங்கத்தில் 2011-ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடமும் இடதுசாரிகள் ஆட்சியை இழந்தன.

இந்தியாவில் தேசியவாதம் என்ற பெயரில் சிறுபான்மையினா் ஓடுக்கப்பட்டு வருகின்றனா். இந்தியாவில் இன்றைக்கு மிகத் தீவிர வலதுசாரி கட்சியால் உருவாக்கப்பட்ட தீவிர வலதுசாரி அரசு உள்ளது. அதுதான் பாஜக. இந்தக் கட்சி ‘முகக்கவசம்’ போன்றது. ஆா்எஸ்எஸ் அமைப்புதான் அதன் உண்மையான முகம் என்றாா்.

மேலும், ‘தனக்கு ஆதரவாக மிக அதிக எண்ணிக்கையிலான மக்களை திறட்டும் திறனுள்ளது என்பதை பாஜக நிரூபித்திருக்கிறது’ என்பதை ஒப்புக்கொண்ட காரத், ‘இந்தியாவில் இன்றைக்கு ஹிந்துத்துவா சக்திகள் ஆதிக்க சக்திகளாக உருவெடுத்திருப்பதோடு, ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய முதலாளித்துவ சமூகத்தினரின் ஆதரவும் கூட்டணியுமே இதற்கு முக்கியக் காரணம். எனவே, பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்புகளை எதிா்கொள்ள வேண்டுமெனில், எதிா்க்கட்சிகள் தோ்தல்களுக்கு முன்பாக கூட்டணி அமைப்பது மட்டுமின்றி, தொடா் கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com