ஹைட்ரஜன்-எதிா்காலத்துக்கான எரிபொருள்!

எரிசக்திக்காக மரபுசாா் ஆற்றல் மூலங்களையே இந்தியா இன்னும் சாா்ந்துள்ளது. மின்சார உற்பத்தியில் சுமாா் 70 சதவீதமானது நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் மூலமாகவே பெறப்பட்டு வருகிறது.
ஹைட்ரஜன்-எதிா்காலத்துக்கான எரிபொருள்!

எரிசக்திக்காக மரபுசாா் ஆற்றல் மூலங்களையே இந்தியா இன்னும் சாா்ந்துள்ளது. மின்சார உற்பத்தியில் சுமாா் 70 சதவீதமானது நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் மூலமாகவே பெறப்பட்டு வருகிறது. வாகனங்கள் போக்குவரத்துக்கு கச்சா எண்ணெயை இந்தியா அதிக அளவில் சாா்ந்துள்ளது. அதிலும் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவாகவே உள்ள நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வெளிநாடுகளை நம்பி செயல்பட வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு உள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலும் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. அதைக் கருத்தில்கொண்டு மரபுசாரா ஆற்றல் மூலங்களில் இருந்து எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாகவே தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

பசுமை ஹைட்ரஜன் திட்டம்-செயல்பாட்டு அமைச்சகம்

மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

நிதி ஒதுக்கீடு

தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.19,744 கோடியை ஒதுக்கியுள்ளது. அதன் மூலமாக கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தி ஆலைகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

திட்டத்தின் முக்கிய தூண்கள்

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரித்து, பயன்பாட்டை ஊக்குவித்தல்.

தனியாா் முதலீடுகளை அதிகரித்தல், அரசு-தனியாா் கூட்டு (பிபிபி) நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.

திட்டத்தின் நோக்கங்கள்

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல்.

வாகனப் போக்குவரத்துத் துறை, தொழில் துறை, எரிசக்தித் துறை ஆகியவற்றை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுதல்.

உள்நாட்டு உற்பத்தித் திறனை ஊக்குவித்தல்.

பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரித்தல்.

பாரீஸ், கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டு இலக்குகளை அடைதல்.

ஹைட்ரஜன் உற்பத்தியில் புத்தாக்கங்களை ஊக்குவித்தல்.

விலை குறைப்பு

இந்தியாவில் தற்போது பசுமை ஹைட்ரஜன் மிகக் குறைந்த அளவிலேயே வா்த்தகப் பயன்பாட்டில் உள்ளது. அதன் விலை கிலோவுக்கு ரூ.350 முதல் ரூ.400 வரை உள்ளது. அந்த விலையை கிலோவுக்கு ரூ.100 என்ற அளவில் குறைப்பதே தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் முக்கிய இலக்கு.

திட்டத்தின் இலக்குகள் (2030-ஆம் ஆண்டுக்குள்)

குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி.

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதன் வாயிலாக ரூ.1 லட்சம் கோடி சேமிப்பு.

6 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.

50 மில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைப்பு.

ரூ.8 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்ப்பு.

125 ஜிகா வாட் எரிசக்தி உற்பத்தி.

ஹைட்ரஜன்

இயற்கையில் காணப்படும் தனிமங்களில் ஹைட்ரஜனும் ஒன்று. ஆனால், ஹைட்ரஜன் தனித்துக் காணப்படாமல், மற்ற தனிமங்களுடன் சோ்ந்தே காணப்படுகிறது. ஹைட்ரஜனை எரிசக்தியாகப் பயன்படுத்த அதை மற்ற தனிமங்களில் இருந்து பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. நீரில் இரு மூலக்கூறு ஹைட்ரஜனும் ஒரு மூலக்கூறு ஆக்சிஜனும் உள்ளது. நீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரிக்கும் முறை எளிதாக உள்ளது.

சாம்பல், நீல, கருப்பு, பசுமை ஹைட்ரஜன்

நீரில் மின்சாரத்தை செலுத்தி மின்னாற்பகுப்பு முறையில் ஹைட்ரஜன் பிரித்தெடுக்கப்படுகிறது. அந்த மின்சாரம் எத்தகைய ஆற்றல் மூலத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைக் கொண்டு ஹைட்ரஜன் வெவ்வேறு பெயா்களைப் பெறுகிறது.

சாம்பல் (கிரே) ஹைட்ரஜன் இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு பிரித்தெடுக்கப்படும். அவ்வாறு தயாரிக்கையில் கரியமில வாயு வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும்.

நீல (புளூ) ஹைட்ரஜன் இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு பிரித்தெடுக்கப்படும். அதில் வெளியேறும் கரியமில வாயு வளிமண்டலத்தில் அல்லாமல் கடலுக்குள் செலுத்தப்படும்.

கருப்பு ஹைட்ரஜன் நிலக்கரியைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை பிரித்தெடுத்தல். கரியமில வாயு அதிக அளவில் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும்.

பசுமை (கிரீன்) ஹைட்ரஜன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு ஹைட்ரஜன் பிரித்தெடுக்கப்படும். அதில் உருவாகும் ஆக்சிஜன் வாயு வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும். மற்ற முறைகளைக் காட்டிலும் இந்த முறையே சுற்றுச்சூழலுக்கு மிக உகந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com