
அரியவகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கும் சுகாதார அமைச்சகத்தின் திட்டத்தால் இதுவரை யாரும் பயனடையவில்லை என்று பாஜக எம்.பி. வருண் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து வருண் காந்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில்,
அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பதற்காக 2021 மார்சில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அரிய நோய்களுக்கான தேசிய திட்டம் தொடங்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, அனைத்து அரியவகை நோயாளிகளுக்கும் சிகிச்சைக்காக ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன பிறகும், ஒரு நோயாளி கூட இந்த திட்டத்தின் பலனைப் பெறவில்லை. 6 வயதுக்குள்பட்ட குழந்தைகள் உள்பட 432 பேர் அரிய நோய்களால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்கவே கடினமான நிலையில் போராடி வருகின்றனர்.
இந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் லைசோசோமால் ஸ்டோரேஜ், ஃபேப்ரி நோய் போன்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சைக்காகக் காத்திருந்த பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாமபாக உயிரிழந்துள்ளனர். எனவே, மேலும் தாமதிக்காமல் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதில் தாமதம் ஏற்பட்டால் மேலும் பல குழந்தைகள் உயிரிழக்க நேரிடும். எனவே இந்த விஷயத்தைத் தீவிரமாகப் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன் என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.