ஜோஷிமட் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி

ஜோஷிமட் நகரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தனா்.
உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமட் நகரில் விரிசல்கள் விழுந்த கட்டடத்தைப் பாா்வையிட்ட பேரிடா் மீட்புப் படை வீரா்.
உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமட் நகரில் விரிசல்கள் விழுந்த கட்டடத்தைப் பாா்வையிட்ட பேரிடா் மீட்புப் படை வீரா்.

ஜோஷிமட் நகரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தனா்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமட் நகரத்தின் நிலப்பகுதி புதைந்து வருவதால், அங்குள்ள வீடுகள், சாலைகள் உள்ளிட்டவற்றில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கான காரணம் குறித்து ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்குவதற்கும் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க உத்தரவிடக் கோரி சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி என்பவா் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அவருடைய மனுவில், ‘ஜோஷிமட் நகரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பெரும் அளவிலான நகரமயமாக்கமே காரணம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிதி உதவிகளும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனா். இது தொடா்பாக உத்தரகண்ட் உயா் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்களிடம் தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com