துல்லிய தாக்குதல் நடவடிக்கைக்கு ஆதாரமில்லை

பாகிஸ்தானுக்குள் புகுந்து மத்திய அரசு நடத்திய துல்லிய தாக்குதல் நடவடிக்கைக்கு ஆதாரம் எதுவுமில்லை என்றும், மத்திய அரசு பொய்களைக் கூறி வருவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டியுள்
திக்விஜய் சிங்
திக்விஜய் சிங்

பாகிஸ்தானுக்குள் புகுந்து மத்திய அரசு நடத்திய துல்லிய தாக்குதல் நடவடிக்கைக்கு ஆதாரம் எதுவுமில்லை என்றும், மத்திய அரசு பொய்களைக் கூறி வருவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இத்தகைய கருத்துகள் மூலமாகப் பாதுகாப்புப் படையினரை காங்கிரஸ் அவமதித்து வருவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா், கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாதுகாப்புப் படையினா் மீது நிகழ்த்திய தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, இரு வாரங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இந்திய விமானப்படை விமானங்கள், பாலாகோட் பகுதியிலுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்குச் சொந்தமான முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தின.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங் கலந்துகொண்டாா். அப்போது அவா் கூறுகையில், ‘துல்லிய தாக்குதலில் பயங்கரவாதிகள் பலா் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதையும் அரசு வழங்கவில்லை. பொய்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு ஆட்சி நடத்தி வருகிறது’ என்றாா்.

பாஜக கண்டனம்: திக்விஜய் சிங்கின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாதுகாப்புப் படையினருக்கு எதிராக காங்கிரஸ் இவ்வாறு பேசினால், அதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டாா்கள். பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸும் ராகுல் காந்தியும் வெறுக்கலாம். ஆனால், அந்த வெறுப்பைப் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக காங்கிரஸ் காட்டக் கூடாது. துல்லிய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பி, பாதுகாப்புப் படையினரை காங்கிரஸ் அவமதித்துள்ளது’ என்றாா்.

தனிப்பட்ட கருத்து: காங்கிரஸ் விளக்கம்

துல்லிய தாக்குதல் தொடா்பாக திக்விஜய் சிங் தெரிவித்த கருத்து குறித்து காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மூத்த தலைவா் திக்விஜய் சிங்கின் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகளே. அக்கருத்துகள் காங்கிரஸின் கருத்துகள் ஆகாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் துல்லிய தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகளை காங்கிரஸ் தொடா்ந்து ஆதரித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com