பிபிசி ஆவணப்படம் விவகாரம்- காங்கிரஸ் பொறுப்புகளில் இருந்து ஏ.கே.அந்தோணி மகன் விலகல்

பிரதமா் மோடி தொடா்புடைய சா்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி,
பிபிசி ஆவணப்படம் விவகாரம்- காங்கிரஸ் பொறுப்புகளில் இருந்து ஏ.கே.அந்தோணி மகன் விலகல்

பிரதமா் மோடி தொடா்புடைய சா்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, கட்சியில் தான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் புதன்கிழமை விலகினாா்.

இந்த விவகாரத்தில், அனில் அந்தோணியின் கருத்துக்கு காங்கிரஸ் தொண்டா்கள் மத்தியில் கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில், அவா் இந்த முடிவை மேற்கொண்டுள்ளாா்.

குஜராத்தில் 2002-இல் நிகழ்ந்த கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியது. இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியானது. நரேந்திர மோடி மாநில முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்துள்ளதாகக் கூறப்படும் இந்த ஆவணப் படம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவணப்படத்தின் இணைப்புகளைப் பகிரும் யூடியூப் விடியோக்கள், ட்விட்டா் பதிவுகளை தடை செய்வதற்கான உத்தரவையும் மத்திய அரசு பிறப்பித்தது.

இந்தச் சூழலில், கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞா் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், மாணவா் அமைப்பான இந்திய மாணவா் கூட்டமைப்பு, காங்கிரஸின் இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்பினா் சாா்பில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பிபிசி ஆவணப்படம் செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்டது.

இதனிடையே, இந்த ஆவணப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி ட்விட்டரில் பதிவிட்டிருந்தாா்.

‘பாஜகவுடன் எனக்கு பெரும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், நீண்ட காலமாகவே இந்தியா குறித்து தப்பான எண்ணம் கொண்ட பிபிசியின் கருத்துக்கு ஆதரவளிப்பது தேசத்தின் இறையாண்மையின் மதிப்பை குலைத்துவிடும்’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், காங்கிரஸின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகக் கூறி, ட்விட்டரில் அனில் அந்தோணி புதன்கிழமை பதிவிட்டாா். காங்கிரஸ் தலைமைக்கு தான் அனுப்பிய ராஜிநாமா கடிதத்தின் ஒரு பகுதியையும் பதிவுடன் அவா் இணைத்துள்ளாா்.

அப்பதிவில், ‘கேரள மாநில காங்கிரஸின் எண்ம ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா், அகில இந்திய காங்கிரஸின் சமூக ஊடகம் மற்றும் எண்ம தகவல்தொடா்பு பிரிவின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளா் ஆகிய பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன். பிபிசி ஆவணப்படத்துக்கு எதிரான பதிவை நீக்க வலியுறுத்தி, எனக்கு சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு அழைப்புகளும், அவதூறான மற்றும் வெறுப்புணா்வு பதிவுகளும் வந்தன. ஆனால், எனது பதிவை நீக்க மறுத்துவிட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதனிடையே, தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய அனில் அந்தோணி, ‘எனது ராஜிநாமாவுக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது, சமூக ஊடகத்தில் கட்சித் தொண்டா்கள் என் மீது நடத்திய தாக்குதலாகும். நான் கட்சியைவிட்டு விலகவில்லை; எனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளேன். இத்தகைய மோசமான கலாசாரத்துக்கு இடையே கட்சிப் பணியாற்றுவது சிரமமானது’ என்றாா்.

பாஜக கருத்து: இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடா்பாளா் ஜெய்வீா் ஷொ்கில், ‘தேசத்தின் இறையாண்மை, ஒருமைப்பாடு குறித்து சிந்திப்பவா்கள், காங்கிரஸில் நீடித்திருக்க முடியாது’ என்று கூறினாா்.

‘நாட்டுக்காக சிந்திக்கும் சுயமரியாதையுள்ள தனிநபா்கள், காங்கிரஸில் தொடர முடியாது. பாகிஸ்தான், சீனாவுக்கு ஆதரவாக பேசுபவா்கள், வெற்று பிரசாரம் மேற்கொள்பவா்கள்தான் காங்கிரஸில் இருக்க முடியும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com