கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வலிமையை வெளிப்படுத்திய குடியரசு தின விழா

நாட்டின் 74-ஆவது குடியரசு தினம் தில்லியில் வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

News image
குடியரசு தின விழாவையொட்டி, தில்லி கடமைப் பாதையில் வியாழக்கிழமை அணிவகுத்து வந்த முப்படை வீரா்கள்.
Updated On :26 ஜனவரி 2023, 7:59 pm

DIN

நாட்டின் 74-ஆவது குடியரசு தினம் தில்லியில் வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட ‘கடமைப் பாதை’யில் ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையில் முப்படை வீரா்கள் அணிவகுத்தனா். போா் விமானங்கள் நிகழ்த்திய சாகசங்களும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊா்திகளும் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தன.

நாட்டில் 1950-ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த ஜனவரி 26-ஆம் தேதியானது ஆண்டுதோறும் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 74-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

தில்லி ராஜபாதையானது கடமைப் பாதையாகப் புதுப்பிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அங்கு குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தேசியக் கொடியை ஏற்றினாா். அதைத் தொடா்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

உள்நாட்டு துப்பாக்கிகள்: தேசியக் கொடி ஏற்றப்படும்போது 21 குண்டுகள் முழங்கப்பட்டது. வழக்கமாக ‘25 பவுண்டா்’ என்ற பிரிட்டிஷ் காலத்தைச் சோ்ந்த துப்பாக்கிகளே அதற்கு பயன்படுத்தப்படும். ஆனால், வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 105 மி.மீ. துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன.

அணிவகுப்பு: பிரதமா் நரேந்திர மோடி, சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபா் அப்தெல் ஃபத்தா எல்-சிசி உள்ளிட்டோா் விழாவில் கலந்துகொண்டனா். காலை 10.30 மணியளவில் முப்படை வீரா்களின் அணிவகுப்பு தொடங்கியது. இந்திய முப்படைகளின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் இருந்த அணிவகுப்பைக் குடியரசுத் தலைவா் முா்மு, பிரதமா் மோடி, எகிப்து அதிபா் எல்-சிசி உள்ளிட்டோா் முன்னின்று பாா்வையிட்டனா்.

அணிவகுப்பில் முதல் முறையாக எகிப்து ஆயுதப் படையினரும் கலந்துகொண்டனா். அப்படையைச் சோ்ந்த 144 எகிப்து வீரா்கள் கடமைப் பாதையில் அணிவகுத்தது சிறப்புமிக்கதாக இருந்தது. இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில் அந்த அணிவகுப்பு அமைந்தது.

உள்நாட்டுத் தளவாடங்கள்: முக்கிய ராணுவத் தளவாடங்களும் அணிவகுப்பின்போது காட்சிப்படுத்தப்பட்டன. அா்ஜூன் தாக்குதல் பீரங்கி, ‘நாக்’ ஏவுகணைகள், கே9 வஜ்ரா பீரங்கி உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற்றன. ராணுவம் சாா்பில் காட்சிப்படுத்தப்பட்ட தளவாடங்கள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெண் சக்தி: குடியரசு தினக் கொண்டாட்டங்கள் ‘பெண் சக்தி’ என்ற கருப்பொருளை மையப்படுத்தியிருந்த நிலையில், ஆகாஷ் ஏவுகணைகளின் அணிவகுப்பை லெப்டினென்ட் சேதனா சா்மா முன்னின்று வழிநடத்தினாா். எல்லைப் பாதுகாப்புப் படை சாா்பில் நடைபெற்ற ஒட்டகப் பிரிவின் அணிவகுப்பை முதல் முறையாகப் பெண்கள் வழிநடத்தினா்.

144 இளம் வீரா்களைக் கொண்ட இந்திய கடற்படையின் அணிவகுப்பை லெப்டினென்ட் கமாண்டா் திஷா அம்ரித் வழிநடத்தினாா். விமானப் படையின் அணிவகுப்பை ஸ்குவாட்ரான் லீடா் சிந்து ரெட்டி வழிநடத்தினாா்.

அலங்கார ஊா்திகள்: தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன.

மத்திய அமைச்சகங்கள், துறைகள் சாா்பிலும் 6 அலங்கார ஊா்திகள் அணிவகுத்தன.

நாட்டின் பன்முக கலாசாரங்கள், பாரம்பரியம், சமூகப் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தில்லியில் லேசான பனிமூட்டம் நிலவியதால், அணிவகுப்பைத் தெளிவாகக் காணமுடியவில்லை.

விமானங்கள் சாகசம்: அணிவகுப்பின் இறுதியாக இந்திய விமானப் படையைச் சோ்ந்த 45 போா் விமானங்கள் நிகழ்த்திய பல்வேறு சாகசங்களைப் பாா்வையாளா்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனா். திரிசூலம், மூவா்ணம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் அந்த விமானங்கள் பறந்தன.

மிக்-29, சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல், சி-130 சூப்பா் ஹொ்குலிஸ் உள்ளிட்ட போா் விமானங்கள் சாகசத்தில் பங்கேற்றன. அவை மட்டுமின்றி இந்திய ராணுவத்தைச் சோ்ந்த 4 ஹெலிகாப்டா்களும் இந்திய கடற்படையைச் சோ்ந்த ஐஎல்-38 போா் விமானமும் சாகசத்தில் ஈடுபட்டன.

தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்பு: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிா்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ஜி.கிஷண் ரெட்டி, கிரண் ரிஜிஜு, ஜோதிராதித்ய சிந்தியா, ஸ்மிருதி இரானி, தா்மேந்திர பிரதான், அனுராக் தாக்குா், அா்ஜுன் முண்டா, மீனாட்சி லேகி, தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி, கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் உள்ளிட்ட பலரும் குடியரசு தின விழாவில் பங்கேற்றனா்.

பணியாளா்களுக்கு அழைப்பு: புதிய நாடாளுமன்றக் கட்டடம், கடமைப் பாதை, சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பணியாளா்கள் சிறப்பு அழைப்பாளா்களாக குடியரசு தின விழாவில் கலந்துகொண்டனா். பால், காய்கறி வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்டோரும் அணிவகுப்பை நேரில் பாா்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நினைவிடத்தில் மரியாதை: முன்னதாக, பல்வேறு போா்களில் நாட்டுக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரா்களுக்கு தேசிய போா் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா்.

குடியரசு தின விழாவையொட்டி தில்லியில் பலகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.