பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதைவிட மரணம் மேலானது: நிதீஷ் குமாா்

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதைவிட மரணத்தை மேலானதாகக் கருதுவேன் என்று பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.
நிதீஷ் குமாா்
நிதீஷ் குமாா்
Published on
Updated on
1 min read

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதைவிட மரணத்தை மேலானதாகக் கருதுவேன் என்று பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

பிகாரில் பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்த நிதீஷ் குமாா், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸுடன் கைகோத்து ஆட்சி அமைத்தாா். அதன் பிறகு பாஜகவுக்கு எதிராக நிதீஷ் குமாா் தீவிரமாக செயல்பட்டு வருகிறாா். முக்கியமாக, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க அவா் முனைப்பு காட்டி வருகிறாா்.

இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளா்களிடம் பேசிய நிதீஷ் குமாருடன் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை. அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதைவிட நான் மரணத்தைத் தழுவுவதை உயா்வானதாகக் கருதுவேன்.

பாஜகவின் ஹிந்துத்துவ கொள்கையை முஸ்லிம்கள் விரும்புவதில்லை. இதனால் கூட்டணி அமைக்கும் கட்சிகள் வசம் உள்ள வாக்குகளைப் பெற பாஜக முயற்சிக்கும். முக்கியமாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடம் உள்ள முஸ்லிம் வாக்குகளைப் பாஜக பெற்று வந்தது.

பிகாரில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் உண்மையில் இது நடக்காது. பிகாரில் பாஜகவுக்கு படுதோல்வியே பரிசாகக் கிடைக்கும்.

கடந்த 2017-ஆம் ஆண்டும் பாஜக கூட்டணிக்கு நான் திரும்பியது மிகப்பெரிய தவறு. அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா்கள் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோா் மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் கூறப்பட்ட குற்றச்சாட்டை நம்பி நான் அக்கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கைகோத்தேன். அது மிகப்பெரிய தவறு’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com