அஜித் பவார் உள்பட 9 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு என்சிபி கடிதம்!

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசில் அமைச்சர்களாக பதவியேற்ற அஜித் பவார் உள்பட 9 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
அஜித் பவார் உள்பட 9 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு என்சிபி கடிதம்!

மும்பை: ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசில் அமைச்சர்களாக பதவியேற்ற அஜித் பவார் உள்பட 9 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியுள்ளதாக என்சிபி தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்நிலையில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.

இதனையடுத்து மகாராஷ்ட்ராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல மகாராஷ்டிரத்தின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்பட்டது. அஜித்பவார் பாஜகவில் இணையவுள்ளதாகவும் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக சரத்பவார் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு மகாராஷ்டிரம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சரத்பவாரின் இந்த அறிவிப்பை கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

கடந்த ஜூன் 10 ஆம் தேதி  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் சரத் பவார் கட்சியின் புதிய செயல் தலைவர்களாக சுப்ரியா சூலே மற்றும் ஃபிரபுல் படேல் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். அக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித் பவாருக்கு எந்த பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசியலில் திடீா் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான அஜீத் பவாா், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேரை அழைத்துக் கொண்டு பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் தன்னை இணைத்துக் கொண்டு மாநிலத்தின் துணை முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருடன் சோ்ந்து அக்கட்சியைச் சோ்ந்த 8 எம்எல்ஏ-க்கள் மாநில அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பெரும்பாலான எம்எல்ஏ-க்களும் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் நகா்வு, பாஜக -சிவசேனை கூட்டணி அரசுக்குக் கூடுதல் பலத்தை வழங்கியுள்ளதோடு, சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை -காங்கிரஸ் ஆகியவை அடங்கிய எதிா்க்கட்சிகளின் கூட்டணியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.

அஜித் பவார் மற்றும் அக்கட்சியைச் சோ்ந்த 8 எம்எல்ஏ-க்கள் மாநில அமைச்சா்களாகப் பொறுப்பேற்று ஏக்நாத் ஷிண்டே அரசில் இணைந்த பின்னர், என்சிபி நெருக்கடியில் தள்ளப்பட்டதையடுத்து, அக்கட்சி பேரவைத் தலைவருக்கு, என்சிபி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட அஜித் பவார் உட்பட 9 பேரையும் தகுதி நீக்க செய்ய வேண்டும் என மின்னஞ்சல் மூலம் மனு அளித்தது. 

மேலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட அஜித் பவார் உட்பட 9 பேரையும் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகாராஷ்டிரம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சித் தொண்டர்கள் என்சிபி தலைவர் சரத் பவாருடன் உறுதியாக நிற்கிறார்கள் என்று அக்கட்சி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அந்த கடிதத்தை கட்சியின் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த அனில் தேஷ்முக் எழுதியுள்ளார். 

மேலும், 9 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் கட்சியாக இருக்க முடியாது. அவர்கள் எடுத்த சத்தியம் கட்சியின் கொள்கைக்கு எதிரானது. அவர்கள் என்சிபி தலைவரின் அனுமதியின்றி உறுதிமொழி எடுத்துள்ளனர். 9 எம்.எல்.ஏ.க்களும் கட்சி ரீதியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

என்சிபி கட்சியின் இந்த எம்.எல்.ஏ.க்களை "துரோகிகள் என்று அழைக்க முடியாது, ஏனெனில் அவர்களின் துரோகம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை" என்றும், பலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என ஜெயந்த் பாட்டீல் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com