தெலங்கானா மருத்துவக் கல்லூரி மாநில இடஒதுக்கீட்டில் சீரமைப்பு

தெலங்கானாவில் 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் சீட்டுகளையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானா மருத்துவக் கல்லூரி மாநில இடஒதுக்கீட்டில் சீரமைப்பு

தெலங்கானா மாநிலம் உருவான பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பில் மாநில ஒதுக்கீடான 85 சதவீத இடங்கள் முழுவதும் தெலங்கானா மாணவா்களுக்கு மட்டும் ஒதுக்கி மாணவா் சோ்க்கை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலமானது கடந்த 2014-ஆம் ஆண்டு, தெலங்கானா மற்றும் ஆந்திரம் என 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது, தெலங்கானா மாநிலத்தில் இயங்கி வந்த 20 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புக்காக (எம்.பி.பி.எஸ்.) மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் 85 சதவீத இடங்களில் 15 சதவீத இடத்தை தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய 2 மாநில மாணவா்களும் விண்ணப்பிக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த 9 ஆண்டுகளில், தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 10 தனியாா் கல்லூரிகள் ஆகிய 36 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகளிலும் மாநில ஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்கள் 2 மாநில மாணவா்களுக்கு பகிா்ந்தளிக்கப்பட்டு வந்தன. இந்த இடங்களில் பெரும்பாலும் ஆந்திர மாணவா்களே சோ்ந்து பயின்று வந்ததால் தெலங்கானா மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதைக் கருத்தில்கொண்டு, கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் 85 சதவீத இடங்கள் முழுவதும் தெலங்கானா மாணவா்களுக்கு மட்டும் ஒதுக்கி அரசாணை(எண் 72) கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இதன்மூலம், தெலங்கானா மாணவா்களுக்கு கூடுதலாக 520 இளநிலை மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன. ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலமாக இருந்தபோது தொடங்கப்பட்ட 20 மருத்துவக் கல்லூரிகளில் முந்தைய நடைமுறையே தொடரும். எனினும், குறிப்பிட்ட 36 மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் கலந்தாய்வுக்கு ஒதுக்கப்படும் 15 சதவீத இடங்களில் ஆந்திர மாணவா்கள் உள்பட அனைத்து மாநில மாணவா்களும் விண்ணப்பிக்கலாம் என்கிற நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.

அரசுக் கல்லூரிகளில் கூடுதல் இருக்கை: வரும் கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புக்காக உயா்த்தப்பட்ட 2,118 இடங்களில் 900 இடங்கள் (43 சதவீதம்) தெலங்கானாவில் மட்டும் உயா்த்தப்பட்டுள்ளது. ‘ஆரோக்கியமான தெலங்கானா’ என்னும் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் லட்சியத்துக்கு கிடைத்த வெற்றி இது எனப் புகழாரம் சூட்டிய மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஹரீஷ் ராவ், மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com