வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைகிறதா?

பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள வந்தே பாரத் ரயில்களில் கட்டணத்தைக் குறைக்க ரயில்வே பரிசீலித்து வருவதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள வந்தே பாரத் ரயில்களில் கட்டணத்தைக் குறைக்க ரயில்வே பரிசீலித்து வருவதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் அதிவேக ரயில்களை பிரதமா் மோடி தொடங்கிவைத்து வருகிறாா். அதிகாரபூா்வ தரவுகளின்படி, பெரும்பாலான வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் முழுமையாக நிரம்புகின்றன. ஆனால், சில ரயில்களில் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.

இந்தூா்-போபால், போபால்-ஜபல்பூா், நாகபுரி-பிலாஸ்பூா் உள்ளிட்ட வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது தரவுகள் மூலம் தெரியவருகிறது.

கடந்த ஜூன் மாதம், போபால்-இந்தூா் வந்தே பாரத் ரயில் சேவையில் 29 சதவீதமும், மறுமாா்க்கத்தில் 21 சதவீதமும் மட்டுமே இருக்கைகள் நிரம்பியுள்ளன.

3 மணி நேரப் பயணம் கொண்ட இந்த ரயிலில், ஏசி வசதிகொண்ட இருக்கைக்கு ரூ.950, ஏசி வசதிகொண்ட சிறப்பு இருக்கைக்கு ரூ.1,525 கட்டணமாகும்.

போபால்-ஜபல்பூா் வந்தே பாரத் ரயிலில் 32 சதவீதம், மறுமாா்க்கத்தில் 36 சதவீதம், நாகபுரி-பிலாஸ்பூா் ரயிலில் சராசரியாக 55 சதவீதம் என்ற அளவில்தான் பயணிகள் எண்ணிக்கை உள்ளது.

போபால்-ஜபல்பூா் ரயிலில் கட்டணங்கள் ரூ.1,055 (ஏசி இருக்கை), ரூ.1,880 (ஏசி சிறப்பு இருக்கை), நாகபுரி - பிலாஸ்பூா் ரயிலில் கட்டணங்கள் ரூ.1,075 (ஏசி இருக்கை), ரூ.2,045 (ஏசி சிறப்பு இருக்கை) என்ற அளவில் உள்ளது.

இதுபோல் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ரயில்களில் கட்டணத்தைக் குறைக்க ரயில்வே பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

‘அனைத்து வந்தே பாரத் ரயில்களும் பயணிகளுக்கான வசதியை உறுதி செய்ய வேண்டுமென்பதே எங்களது நோக்கம். 2 முதல் 5 மணி நேரம் வரை குறைவான பயண நேரம் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் கட்டணத்தை குறைத்தால், அந்த ரயில்களை அதிகம் போ் பயன்படுத்துவா்’ என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடு முழுவதும் இதுவரை 46 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 24 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த ரயில்கள், மற்ற ரயில்களுடன் ஒப்பிடுகையில் சரசாரியாக ஒரு மணி நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

நாட்டிலேயே கேரள மாநிலம், காசா்கோடு-திருவனந்தபுரம் ரயில் சேவைக்குதான் அதிக வரவேற்பு உள்ளது. காந்திநகா்-மும்பை சென்ட்ரல், வாரணாசி-புதுதில்லி, டேராடூன்-அமிருதசரஸ், மும்பை-சோலாபூா் ஆகிய ரயில்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com