புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்து மதிப்பு என்ன? விலகாத மர்மம்!

புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்து மதிப்பு தொடர்பாக கடந்த 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகின்றது.
புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்து மதிப்பு என்ன? விலகாத மர்மம்!

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்து மதிப்பு குறித்து கடந்த 45  ஆண்டுகளாகத் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகின்றது.

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா மாநிலத்தின் புரி நகரத்தில் அமைந்துள்ள வைணவத் திருத்தலமாகும். இக்கோயில் ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கோயிலில் விலை மதிக்கத்தக்க தங்கம், வைரம், வைடூரியங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. வட-கிழக்கில் அமைந்துள்ள பணக்கார கோயில்களில் சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்று என்பதால், ஆண்டுதோறும் ஏராளமான நன்கொடைகளும் குவிகிறது.

இந்நிலையில், கடந்த 1978ஆம் ஆண்டுதான், கோயிலின் கருவூலமான ரத்னா பந்தர் திறந்து சொத்து விவரம் மதிப்பிடப்பட்டது. அதற்குப் பிறகு சுமார் 45 ஆண்டுகளாக, சொத்து மதிப்பு மதிப்பிடப்படாமலேயே, கோயிலுக்குச் சொந்தமான ரத்தினங்கள், தங்கம், வைர நகைகளின் மதிப்பு எவ்வளவு என்பது மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கடந்த ஜூன் 30-ல் பொதுநல வழக்கு ஒன்று ஒடிசா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜெகந்நாதர் கோயிலின் சொத்து மதிப்புகளை மீண்டும் மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்து மதிப்புகள் குறித்து தொடரப்பட்ட பொது நலன் வழக்கில், பதில் மனுத் தாக்கல் செய்ய கோயில் நிர்வாகத்திற்கு ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நோட்டீஸை ஆராய்ந்து, விரைவில் பதில் மனுத் தாக்கல் செய்வோம் என்று கோயிலின் தலைமை நிர்வாகி ரஞ்சன் குமார் கூறியுள்ளார். 

கருவூலத்தில் உள்ள சொத்துகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பிட வேண்டுமென்று ஜெகந்நாதர் கோயில் சட்டம் 1995-ன் படி கூறப்பட்டாலும், இது செயல்படுத்தாமலேயே உள்ளது. கடந்த 1926ல் கருவூலம் ஒரு முறை திறக்கப்பட்டு அதில் உள்ள பொருள்கள் மதிப்பிடப்பட்டது. அதன்பிறகு, 1978-ல் கருவூல நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்பிறகு மதிப்பீடு செய்யப்படவில்லை. 2018ல் கருவூலத்தை மீண்டும் திறக்க அரசு முயன்றது. ஆனால் அதற்கு சரியான கருவி இல்லாத நிலையில் அந்த முயற்சியை கைவிட்டது. 

பணக்காரக் கோயில்களில் ஒன்றாக விளங்கும் புரி ஜெகந்நாதர் கோயிலில் கடந்த 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடிக்கும் மர்மம் விலகுமா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com