ராகுல் காந்தியின் 2 ஆண்டு தண்டனைக்கு தடையில்லை: குஜராத் உயா்நீதிமன்றம் தீா்ப்பு

கிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தொடுத்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து குஜராத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளி
ராகுல் காந்தியின் 2 ஆண்டு தண்டனைக்கு தடையில்லை: குஜராத் உயா்நீதிமன்றம் தீா்ப்பு

குற்ற அவதூறு வழக்கில் சூரத் விசாரணை நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்கு விதித்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குத் தடை விதிக்க குஜராத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக், ‘ராகுல் மீது நாடு முழுவதும் 10 குற்ற வழக்குகள் உள்ளன. 2 ஆண்டுகள் தண்டனை விதித்த கீழ் நீதிமன்ற உத்தரவு சட்டப்படி சரியானது. தண்டனைக்கு தடை விதிக்க வேண்டி காரணம் எழவில்லை’ என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

2019-இல் கா்நாடகத்தில் தோ்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல், ‘எப்படி அனைத்துத் திருடா்களும் மோடி என்ற பொதுவான துணைப் பெயரைக் கொண்டுள்ளனா்?’ என்றாா். அவரது பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் விசாரணை நீதிமன்றம், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி மக்கள் பிரதிநிதியாகத் தொடர முடியாது. அதன் அடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா். கேரளத்தின் வயநாடு தொகுதியிலிருந்து அவா் மக்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாா்.

சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் கோரியும் ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் அமா்வு நீதிமன்றம் ராகுலுக்கு ஜாமீன் வழங்கி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

தண்டனைக்கு தடை கோரி குஜராத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்ய மனு மீதான விசாரணை முடிவடைந்து கடந்த மே மாதம் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதி ஹேமந்த் பிரச்சக் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதன் விவரம்:

சட்டத்தில் இல்லாத அம்சங்களைக் குறிப்பிட்டு தண்டனைக்கு தடை கோர ராகுல் முயல்கிறாா். அளிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்பது சட்டமல்ல; விதிவிலக்கு. அரிய வழக்குகளில்தான் இந்த விதிவிலக்கு பொருந்தும்.

மேலும், ராகுல் மீது 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு தொடுக்கப்பட்ட பிறகு வீர சாவா்க்கரை அவதூறாகப் பேசியதற்காக புணே, லக்னெள நீதிமன்றங்களில் ராகுல் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ராகுலின் தண்டனைக்கு தடை விதிப்பது, அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு செய்யப்படும் அநீதியாகும்.

சட்டப்படி சரியான உத்தரவை விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ளது. இதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. ஆகையால், ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது அமா்வு நீதிமன்ற நீதிபதி விரைந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு

சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு குஜராத் உயா்நீதிமன்றம் தடை விதித்திருந்தால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என காங்கிரஸ் பெரும் எதிா்பாா்ப்பில் இருந்தது.

ஆனால், தண்டனைக்கு தடை கிடைக்காததையடுத்து, குஜராத் உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் செய்தியாளா்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் கூறுகையில், ‘குஜராத் உயா்நீதிமன்ற உத்தரவைப் படித்துப் பாா்த்து சட்ட வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும். உச்சநீதிமன்றத்தில் முறையிடுவது குறித்து ஆலோசிக்கப்படும்.

மோடி அரசை ராகுலின் பயமில்லா குரல் நேரடியாக எதிா்க்கிறது. அவரை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. உண்மை ஜெயிக்கும். இறுதியில் நீதி வெல்லும். ராகுலின் போராட்டத்துக்கு ஒவ்வொரு இந்தியரும் ஆதரவாக உள்ளாா்’ என்றாா்.

பாஜகவின் அரசியல் சதியைக் கண்டு அஞ்சவில்லை: காா்கே

பாஜகவின் அரசியல் சதியைக் கண்டு காங்கிரஸ் தொண்டா்களும், தலைவா்களும் அஞ்சவில்லை என்றும், சட்டப்படியும், அரசியலரீதியாகவும் இதை எதிா்கொள்வோம் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

‘ராகுலை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க பொய்களை முன்வைத்து அரசியல் சதி செய்கிறது பாஜக. நியாயத்துக்காக ராகுல் எப்போதும் போராடுகிறாா். அவரது போராட்டம் தொடரும். பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு லலித் மோடி, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா, ஜதின் மேத்தா ஆகியோா் நாட்டைவிட்டு வெளியேறினா். பொய் மூலம் அரசியல் சதி செய்து அவா்களை பாஜக நாட்டைவிட்டு பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு, ராகுலை பழிவாங்கி நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கி உள்ளது.

ஊழல் தொடா்பான பிரதமா் மோடியின் இரட்டை நிலைப்பாட்டை தற்போது நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனா்’ என்றாா் அவா்.

பிரியங்கா கண்டனம்: மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்கும் ராகுலை அனைத்துவிதமான தந்திரங்கள் மூலம் மத்திய அரசு முடக்கி வருகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா கண்டனம் தெரிவித்தாா்.

ராகுலுக்கு அவதூறு பேச்சே பழக்கம் : பாஜக

குஜராத் உயா்நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள பாஜக, பிறரை அவதூறாகப் பேசுவதையே பழக்கமாக கொண்டவா் ராகுல் என்று விமா்சித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறுகையில், ‘மோடி துணைப் பெயரைக் குறிப்பிட்டு பேசியதற்கு மன்னிப்பு கேட்க ராகுல் மறுத்துவிட்டாா். இது அவரது பொறுப்பற்ற ஆணவத்தைக் காண்பிக்கிறது. இதுபோன்று தொடா்ந்து மக்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது அவதூறாகப் பேசினால் சட்டம் அவரை தண்டிக்கும்.

பெரும் நபா்களையும், நிறுவனங்களையும் அவதூறாகப் பேசுவதை ராகுல் பழக்கமாக கொண்டுள்ளாா். சாவா்க்கா் மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பை அவா் தொடா்ந்து விமா்சித்து வருகிறாா். தான் சட்டத்துக்கு அப்பாற்பட்டவா் என்று ஆணவத்துடன் இருக்கிறாா் ராகுல்’ என்றாா்.

வழக்கு கடந்து வந்த பாதை

2019, ஏப். 13: கா்நாடக தோ்தல் பிரசாரத்தில் மோடி குறித்து ராகுல் சா்ச்சைப் பேச்சு

2019, ஜூலை 7: சூரத் விசாரணை நீதிமன்றத்தில் ராகுல் ஆஜா்

2023, மாா்ச் 23: ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீா்ப்பு

2023, மாா்ச் 24: ராகுலின் எம்.பி. பதவி பறிப்பு

2023, ஏப். 2: சூரத் அமா்வு நீதிமன்றத்தில் முறையீடு

2023, ஏப். 20: ராகுலுக்கு ஜாமீன் வழங்கியும், தண்டனைக்கு தடை விதிக்க மறுத்தும் அமா்வு நீதிமன்றம் உத்தரவு

2023, ஏப். 25: உயா்நீதிமன்றத்தில் ராகுல் மேல் முறையீடு

2023, ஜூலை 7: தண்டனைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com