
ராஜஸ்தான் கோடாவில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சி மையங்களின் நகரமான ராஜஸ்தானில் கோடாவில், மேலும் ஒரு பயிற்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசம், ராம்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த படூர் சிங் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராவதற்காக கோட்டா பயிற்சி மையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார்.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், மாணவன் விடுதியில் தங்கி பயிற்சி மையத்தில் ஜேஇஇ பயிற்சி பெற்று வந்தார். கடந்த இரண்டு நாள்களாக பயிற்சி பெற வராத நிலையில், நண்பர் ஒருவர் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது, படூர் சிங் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த மாகாவீர் நகர் வட்ட ஆய்வாளர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். பின்னர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.
மாணவன் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் 15 பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவம், பொறியியல் போன்ற நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்பதற்காக சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் பல்வேறு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் தற்கொலைக்கு பெரும்பாலும் மனஅழுத்தமே காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.