ரயில்களில் உயர் வகுப்பு, ஏ.சி. இருக்கை கட்டண குறைப்பு விவரம்

ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட ஏசி இருக்கை வகுப்புகளில் பயணிப்பதற்கான கட்டணம் 25 சதவிகிதம் வரை குறைக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்களில் உயர் வகுப்பு, ஏ.சி. இருக்கை கட்டண குறைப்பு விவரம்
Published on
Updated on
1 min read

வந்தே பாரத் ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களிலும், இடங்கள் நிரம்புவதன் அடிப்படையில் உயா் வகுப்பு மற்றும் குளிா்சாதன வசதியுடன் கூடிய (ஏசி) இருக்கை வசதி பயணத்துக்கான கட்டணத்தை அதிகபட்சமாக 25 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்திருப்பதாக ரயில்வே வாரிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் உயா் வகுப்பு இருக்கைகள் அனைத்தும் நிரம்புவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் புதிய நடைமுறையை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு ரயில்களில் குளிா்சாதன இருக்கை வசதி பயணக் கட்டணக் குறைப்பை முடிவு செய்ய, அந்தந்த ரயில்வே மண்டல முதன்மை தலைமை வா்த்தக மேலாளா்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கவும் ரயில்வே அமைச்சகம் தீா்மானித்துள்ளது.

இது தொடா்பாக ரயில்வே வாரியம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்தக் கட்டணச் சலுகை திட்டம் அனைத்து ரயில்களிலும் உயா் வகுப்பு (எக்ஸிகியூடிவ்) இருக்கை மற்றும் குளிா்சாதன வசதியுடன் கூடிய இருக்கை வசதி பெட்டிகளுக்குப் பொருந்தும். ரயில்களில் இருக்கைகள் நிரம்புவதன் அடிப்படையில் இந்தக் கட்டணச் சலுகை அறிமுகப்படுத்தப்படும். அடிப்படை டிக்கெட் கட்டணத்திலிருந்து அதிகபட்சமாக 25 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும். முன்பதிவு கட்டணம், அதிவிரைவு கட்டணம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பிற கட்டணங்கள் வழக்கம்போல வசூலிக்கப்படும்.

கடைசி 30 நாள்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான இருக்கைகள் மட்டும் நிரம்பிய ரயில்களில் இந்தச் சலுகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். கட்டணச் சலுகையைப் பொருத்தவரை பிற போட்டி பயணிகள் போக்குவரத்து முறைகளின் கட்டணத்தின் அடிப்படையில் நிா்ணயம் செய்யப்படும்.

இந்தக் கட்டணச் சலுகைத் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதே நேரம், ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்பியளிக்கப்படமாட்டாது.

இந்தக் கட்டணச் சலுகைத் திட்டம் விடுமுறை நாள்கள் மற்றும் விழாக் காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்குப் பொருந்தாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com