மக்களவைத் தேர்தல்: ராமநாதபுரத்தில் மோடி போட்டி?

பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்திலிருந்து போட்டியிடலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி (கோப்பிலிருந்து..)
பிரதமர் மோடி (கோப்பிலிருந்து..)


ஹைதராபாத்: பாஜக மத்திய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்பட்சத்தில், பிரதமர் நரேந்திர மோடி வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்திலிருந்து போட்டியிடலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்தியாவில் தன்னை உறுதியாக நிலைநிறுத்தும் நோக்கில், தென்னிந்திய மாநிலம் ஒன்றில் இருந்து மக்களவைத் தேர்தலில் மோடியை வேட்பாளராக நிறுத்த கட்சி முடிவு செய்ததாக கட்சியின் தலைவர் ஜேபி நட்டா பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இதுவே, பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்திலிருந்து போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதற்குக் காரணியாக அமைந்துவிட்டது.

தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமையன்று, 11 மாநில பாஜக தலைவர்கள் மற்றும் தேசிய பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றிய கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, இந்த தகவலை தெரிவித்திருந்தார்.

அவ்வாறு தென் மாநிலத்தில் போட்டியிடுவது என்றால், எங்கே போட்டியிடலாம் என்று கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளிடம் நட்டா கேள்வி எழுப்பிய போது, பெரும்பாலானோரின் ஒருமித்த கருத்தாக இருந்தது ராமநாதபுரம். தற்போது, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் கே. நவாஸ் கனி எம்.பி.யாக இருக்கிறார்.

பிரதிநிதிகளின் பரிந்துரையானது, மிகவும் ஒருமித்ததாகவும், அதே நேரத்தில் சவாலாகவும் இருப்பதற்குக் காரணம், பிரதமர் மோடி ஏறக்னவே இந்துக்களின் சிறப்பான தலமாகக் கருதப்படும் வாராணசியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். 

எனவே, பிரதமர் மோடி வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்திலிருந்து போட்டியிட்டு, அதிக முஸ்லிம்கள் இருக்கும் தொகுதியில், நவாஸ் கனியை வீழ்த்தினால், அது ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களுக்கும், 'இந்து மக்கள் பாஜகவின் வாக்கு வங்கியாக மாறினால், எதுவும் சாத்தியம்' என்பதை பாஜக உரக்க ஒலிக்கும் செய்தியாக மாறிவிடும் என்று கருதுப்படுகிறது.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை பாஜக தலைவர் நட்டா மிகவும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களிலிருந்து 50 தொகுதிகளை பாஜக கைப்பற்ற வேண்டும் என்று முழக்கத்தை வைத்துள்ளார்.

ஏற்கனவே, வட மாநிலங்களில், சில எதிர்ப்புக் காரணிகளால், பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவை நேர் செய்வதற்காக, தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சியை அதிகரித்து, நாடு முழுவதும் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது நட்டாவின் விருப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலங்கானாவில் வரும் பேரவைத் தேர்தலுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி மேலும் இரண்டு பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்பார் என்று கூறிய நட்டா, மாநில பாஜக தலைவரை சந்தித்து, பாஜகவிலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணையும் எண்ணத்தில் இருக்கும் தலைவர்களை அழைத்து அவர்களை மனதை மாற்றி, பாஜகவிலேயே இருக்க வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தென்னிந்திய மாநிலங்களில், பாஜக தலைவர்கள் ஒருமித்து பாடுபட்டு, பாஜக ஆட்சிக்கு வர பாடுபட வேண்டும் என்றும் நட்டா கேட்டுக் கொண்டார். 

ஏற்கனவே, தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற பல்வேறு நடவடிக்கைகளை கட்சித் தலைமை மேற்கொண்டு வந்த போதிலும், பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால், தற்போது ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரை, ஒருவேளை நாளை கட்சியின் தலைமையால் ஒப்புக்கொள்ளப்பட்டு, பிரதமர் மோடியும் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால், நிலைமை எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com