
பெங்களூரு: பெங்களூருவில் தனியார் ஐ.டி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் முன்னாள் ஊழியர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அமிர்தஹள்ளி பம்பா விரிவாக்க பகுதியில் வீடு ஒன்றில் ஏரோனிக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்ற பெயரில் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வந்தது. பின்னர் வேறொரு கட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பணீந்திர சுப்ரமணியம் (36) மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வினு குமார் (40) ஆகியோர் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை அந்நிறுவனத்தில் புகுந்த முன்னாள் ஊழியர் ஒருவர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும், அங்கிருந்த பணீந்திர சுப்ரமணியம் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வினு குமாரை மற்ற ஊழியர்கள் முன்னிலையில் ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை காப்பாற்ற வந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடகிழக்கு பெங்களூரு நகர துணை காவல் ஆணையர் லட்சுமி பிரசாத், இது கூறியதாவது: இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏரோனிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பெலிக்ஸ் என்ற முக்கிய குற்றவாளியை தேடி வருகிறோம். அவர் தனது சொந்த நிறுவனத்தை நிறுவதற்காக பணியில் இருந்து விலகியுள்ளார். இதனிடைடே, அவரது தொழிலில் இவர்கள் இருவரும் தலையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போலீசாருக்கு சில தடயங்கள் கிடைத்துள்ளன, மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
பெங்களூருவில் தனியார் ஐ.டி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி முன்னாள் ஊழியர் ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஐ.டி. ஊழியர்களிடையே அதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.