சந்திரயான்-3
சந்திரயான்-3

சந்திராயன் - 3 கவுன்ட் டவுன் தொடங்கியது!

நிலவை ஆய்வை செய்யும் சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான 25.30 மணிநேர கவுன்ட் டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்கியுள்ளது.
Published on

நிலவை ஆய்வை செய்யும் சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான 25.30 மணிநேர கவுன்ட் டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்கியுள்ளது.

முன்னதாக, சந்திரயான்-3 திட்டத்துக்கான ஆயத்த நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு புதன்கிழமை ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், அந்த விண்கலத்தைச் சுமந்து செல்லும் எல்விஎம்-3 ராக்கெட்டை ஏவுவதற்கு இஸ்ரோ செயல் திட்ட வாரியம் அனுமதி வழங்கியது.

இதன்மூலம் திட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) பிற்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளன.

இஸ்ரோ சாா்பில் ரூ.615 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத் திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

மொத்தம் 3,900 கிலோ எடை கொண்ட அந்த விண்கலத்தில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சந்திரயான் -2 திட்டத்தில் லேண்டா் கலன் வேகமாக நிலவில் தரையிரங்கியதால் அதில் இருந்த லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் செயல்படவில்லை. இதனால் இந்த முறை லேண்டரை மிக துல்லியமாகவும், இலகுவாகவும் தரையிறக்கும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனா்.

முந்தைய திட்டத்தில் லேண்டா் கலனுக்கு ‘விக்ரம்’ (ஆற்றல்) என்றும் ரோவா் கலனுக்கு ‘பிரக்ஞான்’ (ஞானம்) என்றும் பெயரிடப்பட்டது. அதே பெயரிலேயே சந்திரயான்-3 திட்டத்தில் இடம்பெற்றுள்ள லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் விண்ணுக்கு பயணிக்க உள்ளன. முந்தைய திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பக் கருவிகள் இதிலும் நிறுவப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் இறுதியில் அவை நிலவில் தரையிறங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

என்னென்ன ஆய்வுகள்:

நிலவின் தரைப்பரப்பின் தன்மை, சூழல் ஆகியவற்றை சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் ஆய்வு செய்யும். அதன்படி, நிலவின் தரைப்பரப்பில் மின்னூட்ட அதிா்வுகள், நிலநடுக்க அதிா்வுகள், தட்பவெப்ப நிலை ஆகியவை பரிசோதிக்கப்பட உள்ளன. அதற்காக நிலவின் தரைப்பரப்பில் சென்சாா் மூலம் 10 செ.மீ. ஆழத்துக்கு துளையிட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது.

லேண்டா் மற்றும் ரோவா் கலன்களின் ஆயுள்காலம் மொத்தம் 14 நாள்களாகும். அதற்குள்ளாக அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகவல்கள் அனுப்பப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com