
தில்லியில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், தலைநகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், தொடர் மின்வெட்டு அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
ஹரியாணாவில் பெய்துவரும் கனமழையால், அங்குள்ள அணை திறக்கப்பட்டு யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தில்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
யமுனை நதிக்கு மிக அருகேயுள்ள போட் கிளப், பாண்டவ் நகர், பஜன்புரா ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தில்லி செங்கோட்டை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல முக்கிய அரசு கட்டடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தில்லியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தில்லி நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பல இடங்களில் வெள்ளப்பெருக்கால் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருவதால், பல இடங்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயமும் உள்ளது.
உத்தரகண்ட், மேகாலயா, சிக்கிம் மாநிலங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.