ராகுல் காந்தி மேல்முறையீடு: ஜூலை 21-ல் உச்சநீதிமன்றம் விசாரணை!
அவதூறு வழக்கில் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு


அவதூறு வழக்கில் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) விசாரிக்கப்படவுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தார். இது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞர் அபிஷேக் சிங்வியின் கோரிக்கையை ஏற்று, மனுவை ஜூலை 21-ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது:
குஜராத் உயர்நீதிமன்றத்தின் ஜூலை 7-ஆம் தேதி தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை எனில், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கு தடை ஏற்படுத்துவதுபோல் அமைந்துவிடும். முன்னெப்போதும் இல்லாத வகையில், குற்றவியல் அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அரிதினும் அரிதான நிகழ்வாகும்.
ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் இத்தகைய நடவடிக்கை, இந்தியாவின் அரசியல் சூழலின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.
கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியைப் பெற்று மக்களவைக்கு மனுதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருவேளை, அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கப்படவில்லை எனில், வரவிருக்கும் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியாமல் போய்விடும்.
அற்பமான குற்றச்சாட்டின்பேரில் எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது, முழுநேர அரசியல்வாதியான மனுதாரருக்கு மட்டுமன்றி அவருடைய தொகுதி மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பாதிப்பையும் காயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்புகள், மனுதாரரின் ஒரு வரி விமர்சனத்தை மிகத் தீவிரமானதாகவும், தவறானதாகவும் சித்தரிப்பதாக அமைந்துள்ளன.
மனுதாரருக்கு எதிரான புகாரில், 13 கோடி பேரைக் கொண்ட ஒரு வரையறுக்கப்படாத உருவமற்ற சமூகக் குழு அவமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. "மோடி' என்ற குடும்பப் பெயர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு சமூகங்கள் மற்றும் துணைச் சமூகங்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதாவது, இந்த குடும்பப் பெயர் பல்வேறு ஜாதிகளில் உள்ளது. அந்த வகையில், "மோடி' என்ற குடும்பப் பெயரை பொதுவான தன்மை அல்லது ஒற்றுமை இல்லாததாகவே கருத முடியும்.
அதோடு, பொதுக்கூட்டத்தில் "மோடி' என்ற விமர்சனத்தை மனுதாரர் முன்வைப்பதற்கு காரணமான குறிப்பிட்ட 3 நபர்கள் சார்பில் இந்த அவதூறு வழக்கு தொடரப்படவில்லை. மாறாக, "மோடி' என்ற குடும்பப் பெயர் உள்ளதாகக் கூறி மனுதாரரின் விமர்சனத்துக்கு தொடர்பில்லாத குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நபர் சார்பில் இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவருக்கு இந்த விமர்சனத்தால் தனிப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாக வழக்கில் குறிப்பிடப்படவில்லை.
மேலும், புகார்தாரர் குஜராத்தில் "மோத் வனிகா' சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, அவதூறு வழக்கில் எனது சிறைத் தண்டனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தனது 731 பக்க மேல்முறையீட்டு மனுவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...