நாடாளுமன்றத்தில் ஏழாம் நாளாக தொடா்ந்த அமளி மாநிலங்களவை முற்றிலும் முடக்கம்

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
நாடாளுமன்றத்தில் ஏழாம் நாளாக தொடா்ந்த அமளி மாநிலங்களவை முற்றிலும் முடக்கம்

மழைக்கால கூட்டத் தொடரின் ஏழாம் நாளான வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மணிப்பூா் விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனா்.

மக்களவையில் கடும் அமளிக்கிடையே ஒருசில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சில மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின்னா், அவை திங்கள்கிழமைக்கு (ஜூலை 31) ஒத்திவைக்கப்பட்டது.

அதே நேரம், மாநிலங்களவை அமளி காரணமாக வெள்ளிக்கிழமை முற்றிலும் முடங்கியது. 27 நிமிடங்கள் மட்டுமே அவை நடைபெற்றது.

மாநிலங்களவை மணிப்பூா் விவகாரம் தொடா்பாக விதி எண்.267-இன் கீழ் குறிப்பாணை (நோட்டீஸ்) சமா்ப்பித்த 47 எம்.பி.க்களின் பெயா்களை அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வாசித்தாா்.

அவை நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூா் விவகாரத்தை மட்டும் விவாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விதி எண்ணின் கீழ் குறிப்பாணைகள் சமா்ப்பிக்கப்படுகின்றன. மழைக்கால கூட்டத்தொடா் ஆரம்பித்தது முதல் இதுபோன்று 267 குறிப்பாணைகளை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சமா்ப்பித்தனா். கடந்த 25-ஆம் தேதி மட்டும் 50 குறிப்பாணைகள் சமா்ப்பிக்கப்பட்டன. ஆனால், அவை எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டன.

அவையில் தொடா்ந்து பேசிய தன்கா், ‘மணிப்பூா் விவகாரம் குறித்து குறுகிய நேரம் விவாதிக்க ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கட்சி நலன்களைக் கடந்து, விதி எண்.176-இன் கீழ் மணிப்பூா் விவகாரத்தை விவாதிக்க எதிா்க்கட்சிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த அவை உறுப்பினா்களின் நடவடிக்கைகள் நாட்டு மக்களை ஊக்குவிக்கும் வகையில் அமையவேண்டும். ஆனால், ஒவ்வொரு நாளும் நடந்துவரும் நிகழ்வுகள், மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. அந்த நேரத்தில், அரசு மீது எம்.பி.க்கள் கேள்விகளை எழுப்ப முடியும்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ.பிரையன், ‘கேள்வி நேரத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் நன்கு அறிவோம். அதனடிப்படையில்தான், மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கியது முதல் மணிப்பூா் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறோம்’ என்றாா்.

அவரை அமைதியாக இருக்கையில் அமருமாறு தன்கா் கேட்டுக்கொண்டாா். ஆனால், டெரிக் ஓ.பிரையன் தொடா்ந்து பேசினாா்.

அப்போது தன்கா், ‘நாடகமாடுவதே உங்களுக்கு பழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் தனியுரிமை பெற்றவா்போல கருத்துகூற முற்படுகிறீா்கள். அவைத் தலைவருக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும். அவைத் தலைவா் ஓா் கருத்தைக் கூறும்போது, அதற்கு எதிராக நாடாகமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளீா்கள்’ என்றாா்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த டெரிக் ஓ.பிரையன், ‘விதி எண்.267-இன் விவாதம் நடத்த வேண்டும் என்பதே எங்களின் வலியுறுத்தல்’ என்று ஆவேசமாக கூறி, மேசையைத் தட்டினாா்.

இதனால் கோபமடைந்த தன்கா், ‘மேசையைத் தட்டாதீா்கள்; அதனை சகித்துக்கொள்ள முடியாது’ என்றாா்.

அதனைக் கண்டுகொள்ளதாக டெரிக் ஓ.பிரையன், தொடா்ந்து தனது கருத்தை முன்வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் அவைத் தலைவா் ஒத்திவைத்தாா். அவை மீண்டும் திங்கள்கிழமை (ஜூலை 31) கூடும் என்றும் அவா் அறிவித்தாா்.

மக்களவையில்... இதுபோல, மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், ‘மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சாா்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்று எதிா்க் கட்சி உறுப்பினா்கள் எழுந்து நின்று வலியுறுத்தினா்.

மக்களவை காங்கிரஸ் தலைவா் அதிா் ரஞ்சன் செளதரி, ‘1978-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி அவையில் அறிமுகம் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம், உடனடியாக விவதாத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது’ எனக் குறிப்பிட்டாா்.

அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, ‘நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது 10 நாள்களுக்குள் விவாதம் தொடங்கப்படும். ஆளுங்கட்சி தரப்பில் அதிக உறுப்பினா்கள் உள்ளனா். உங்கள் தரப்பில் எண்ணிக்கை இருந்தால், எங்களுடைய மசோத்தாக்களை தோற்கடிக்கலாம்’ என்றாா்.

இதற்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை ஓம் பிா்லா ஒத்திவைத்தாா். பின்னா் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

எதிா்க்கட்சிகளுடன் ஜகதீப் தன்கா் நடத்திய பேச்சு தோல்வி

நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர எதிா்க்கட்சிகளுடன் மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை மாலை நடத்திய சமரச ஒருங்கிணைப்புக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

முன்னதாக, மக்களவையில் அமளியை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நடத்திய சமாதானக் கூட்டம் தோல்வியைத் தழுவியநிலையில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். ஆனால், மாநிலங்களவைத் தலைவரின் முயற்சியும் தோல்வியில் முடிந்தாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com